ADVERTISEMENT

முடக்கபட வேண்டியது இணையதளம் அல்ல... எடப்பாடி ஆட்சிதான்! - பிரேமலதா கண்டனம்!

07:18 PM May 24, 2018 | vasanthbalakrishnan

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்துவர, தேமுதிக மகளீரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வரலாற்றில்தான் ஜாலியன்வாலாபாத் படுகொலையை பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் முதல்முறையாக ஜாலியன்வாலாபாத் படுகொலைக்கு இணையாக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் அவமான சின்னம். 22ம் தேதி தமிழ்நாட்டின் கருப்பு நாள். இன்றைக்கு ஒரு மானை சுட்டாவே தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் இருக்கிறோம். இதில் மனிதர்களை சுடக்கூடிய அதிகாரத்தை தந்தவர் யார்? நீங்க அப்படியே சுட வேண்டுமென்றால் வானத்தை பார்த்து தான் சுட வேண்டும். நெஞ்சை பார்த்து வாயை பார்த்து சுடுவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?

ADVERTISEMENT

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்தியை அறிந்தோம். முடக்கப்பட வேண்டியது இணையதளம் அல்ல. இந்த ஆட்சி. நேற்று எஸ்.பி.யையும், கலெக்டரையும் மாற்றினார்கள். மாற்றப்பட வேண்டியது இந்த அரசுதான். இந்த எஸ்.பி.யையும், கலெக்டரையும் மாற்றுவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடைபெறாது. ஏனென்றால் 100 நாட்களாக அவர்கள் அறவழியில் தான் போராடினார்கள். அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அவர்கள் நாங்கள் 100வது நாள் பேரணியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறோம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுதான் வந்தார்கள். இது வேண்டுமென்றே அந்த பேரணிக்கு அனுமதி கொடுத்தார்கள். அலுவலகம் வரை வருவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? முதலிலேயே மக்களை காப்பதற்கும் சட்டத்தை காப்பதற்கும் அவர்கள் முன்கூட்டியே இதை செய்திருக்கலாம். இது திட்டமிட்டு படுகொலை செய்வதற்காக செய்யப்பட்ட விஷயமாக தான் மக்கள் கருதுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கது.

100வது நாள் பேரணி வருகிறோம் என்று அவர்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுதான் வருகிறார்கள். அறிவிக்கமால் வரவில்லை. இன்றைக்கு 2000, 3000 போலீசை அனுப்புகிறவர்கள் ஏன் முன்கூட்டியே அனுப்பவில்லை? கலெக்டர் அலுவலகம் வரையும் ஏன் பேரணியை அனுமதிக்கிறீர்கள்? முன்கூட்டியே தடுத்திருக்கலாம். மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு திட்டமிட்டு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அடக்குமுறைகளை ஏற்படுத்தி மக்களுக்கு கொலை செய்திருக்கிறார்கள். 11 பேர் இறந்திருக்கிறார்கள் என்றால் ஒரு பேருக்கு 10 லட்சம் அறிவிக்கிறது இந்த அரசு. வெக்கமாக இல்லை? அப்போ இங்கே ஒரு உயிரின் மதிப்பு 10 லட்சம். 10 கோடி கொடுத்தால் கூட அந்த குடும்பத்துக்கு போன உயிர் திரும்பி கிடைக்குமா? அதிகமான காயத்திற்கு 3 லட்சம், சாதாரண காயத்திற்கு ஒரு லட்சம் என்று சொல்லுகிறார்கள். எது செய்தாலும் காசு கொடுத்து வாயை அடக்க வேண்டும் நினைக்கிறது இந்த அரசு. மக்களுடைய எழுச்சி தமிழ்நாடு முழுக்க இருக்கிறது எனவே மாற்ற வேண்டியது தமிழக அரசும், செயலிழந்துள்ள எடப்பாடி ஆட்சியும் தான்.

மக்களின் போராட்டம் அதிகமான காரணத்தில்தான் இணையதளத்தை முடக்குகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு கூடாது என்ற சொல்லுகிற நிலைமையை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஒரு அரசு, வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டு ஸ்டெர்லைட்டுக்கும் அந்த முதலாளிக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நிலையை நாம் இன்றைக்குக் பார்கிறோம். இது உண்மையில் வெட்கபட வேண்டிய விஷயம்.

எதற்கு எடுத்தாலும் கேமரா முன்னாடி வந்து நிற்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த அரசு ஏன் ஸ்டெர்லைட்டில் நடந்த பாதிப்பை பார்க்கவில்லை? எனவே இதன் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியை ஒட்டுமொத்த தமிழகமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லுகிறார்கள். இந்த ஆளும் ஆட்சி மக்களுக்காக என்ன செய்தார்கள்? மக்களை சந்தித்து குறைகளை கேட்டீர்களா? ஒளிந்து மறைந்துகொள்ளக்கூடிய ஆட்சி இங்கே நடக்கிறது. இது உண்மையான ஆட்சியாக இருந்தால் மக்களை போய் சந்திக்க வேண்டியது தானே? இன்றைக்கு எல்லோருக்கும் பணம் விளையாடி இருக்கும் இது தான் உண்மை. இந்த மாபெரும் படுகொலைக்கு பின்னால் இருப்பது பணம் என்று தான் எல்லாரும் சொல்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. இந்தமாதிரி நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்காத வண்ணம் மாபெரும் மாற்றம் தமிழ்நாட்டுக்கு வேண்டும்.

இன்றைக்குதான் மின் இணைப்பை துண்டித்து இருக்கிறார்கள். விரிவாக்கம் செய்வதை தான் தடை செய்து இருக்கிறார்கள். ஆலையை மூட போகின்றோம் என்ற தகவல் வரவில்லை, ஆகவே இவையெல்லாம் ஒரு கண்துடைப்பு. இந்த ஆட்சி மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆலைக்காக அல்ல. நிச்சயமாக மக்கள் அதை நிருபிப்பார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT