itnl company director chennai special court order

Advertisment

250 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கைதான ஐ.டி.என்.எல். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராமச்சந்திர கருணாகரனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அவரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐ.டி.என்.எல். நிறுவனத்தின் 6 மாத பங்கு ஈவுத் தொகையாக சுமார் 200 கோடி ரூபாயை,11.8 சதவீத வட்டியுடன் வழங்குவதாக, 63 மூன் லிமிடெட் நிறுவனத்துடன்ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் 2018- ஆம் ஆண்டு முதல், ஒப்பந்தம் மீறப்பட்டு ஐடிஎன்எல் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக, 63 மூன் நிறுவனத்தின் சார்பில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் அடிப்படையில், ஐ.டி.என்.எல். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த ராமச்சந்திர கருணாகரன் கைது செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

தனக்கு ஜாமீன் கோரி ராமச்சந்திர கருணாகரன் தாக்கல் செய்த மனுவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரும் காவல்துறை மனுவும், நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதரார் தரப்பில், தங்களுடைய நிறுவனத்தை மத்திய அரசு கையகப்படுத்தி உள்ளதாகவும், நிதி மோசடி எனக் கூறி இந்த வழக்கில் கைது செய்ய முடியாது என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. காவல்துறை தரப்பில், நிதி முறைகேடு தொடர்பாக 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், பண மோசடி வழக்கில் கைதான ராமசந்திர கருணாகரன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். அதேசமயம், ராமச்சந்திர கருணாகரனை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.