publive-image

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று மதிமுக தலைவர் வைகோவை பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அவரது மகன் துரை வைகோவும் உடனிருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ''ஈழ உணர்வுள்ளவர், ஆனால் நிரபராதி, எந்த குற்றமற்றவர், அதிலே எந்த தொடர்பும் கிடையாது. கடைசியில் நீதி வென்றது. இங்கிருக்கும் ஆளுநர் அரசாங்க முடிவை செயல்படுத்தாமல் இருந்தார். கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 142 ஆவது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்து அவருக்கு வாழ்வு கொடுத்திருந்தாலும் அவரது வாழ்வு அழிந்துவிட்டது, இளமைக்காலம் அழிந்துவிட்டது, வசந்தகாலம் எல்லாம் போய்விட்டது. விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் ஒரு வீராங்கனையைப் போல போராட்டம் நடத்தினார். யாராக இருந்தாலும் சோர்ந்து விடுவார்கள், கவலையில் ஆழ்ந்து விடுவார்கள் ஆனால் அது எதுவுமே இல்லாமல் போராடினார். எமன் வாயிலிலிருந்து மகனை மீட்டுக் கொண்டு வந்துவிட்டார். மீதம் உள்ள 6 பேரும் இதே முறையைப் பின்பற்றி வெளியே வந்துவிடுவார்கள்'' என்றார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து பேசிய பேரறிவாளன், ''சிறைக்கு போவதற்கு முன்பே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன், இதே வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். அவருடன் பொடாவில் இருந்தது மறக்க முடியாத அனுபவம். 2000 காலகட்டத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, வாஜ்பாயிடம் எனக்காக மனு கொடுத்தார். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி இந்த வழக்கில் வந்தபிறகுதான் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. இந்தியாவிலுள்ள சட்ட அறிஞர்களின் பார்வை இந்த வழக்கில் திரும்ப காரணமாக இருந்தது. அவர் வந்ததற்கு முழு காரணம் வைகோ அவர்கள்தான். அண்ணன் இல்லையென்றால் அது சாத்தியமே ஆகியிருக்காது. அதற்கெல்லாம் சேர்த்து நன்றி சொல்லவேண்டும் என வந்தேன்'' என்றார்.