ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய பா.ஜ.க அரசின் கனவுத் திட்டம் ஆகும். அந்த திட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று பா.ஜ.க அரசு தீவிர முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 12ஆம் தேதி (12.12.2024) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதே சமயம் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''முதன்முதலாக அமர்ந்த 13 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஃபெடரலிசத்தை எதிர்த்து எதையுமே செய்யக்கூடாது என்பது அடிப்படை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் இது மாநில உரிமைகளை வலுவிழக்க செய்யும். மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு மாநில அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த அரசை களைப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை வழங்கக்கூடிய ஒரு மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் மாநிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய முக்கியமான விஷயங்களையும் ஒரு குழப்பத்தில் கொண்டு போய் நிறுத்தி தேர்தல், மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக்கூடிய ஒரு தேர்தலை நோக்கி தான் இந்த சட்ட மசோதா நம்மை அழைத்துச் செல்லும்.
நம்முடைய மாநில சுயாட்சிக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் என எல்லாவற்றுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டிருக்கக்கூடிய மசோதா இது. அவர்கள் சொல்கிறார்கள் இந்த மசோதாவை கொண்டு வருவதால் தேர்தல் செலவுகள் குறையும் என்று சொல்கிறார்கள். பல மாநிலங்களில் ஒரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட முடிவதில்லை. கிட்டத்தட்ட ஏழு கட்டமாக ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாடு முழுவதும் தேர்தல், அதுவும் மாநிலங்களுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்துவது என்றால் அதற்கான வாய்ப்புகள் எப்படி வரும்? அதற்கு வேலை செய்யக்கூடிய அதிகாரிகள் எங்கிருந்து உருவாக்கப்படுவார்கள்? என நிறைய கேள்விகள் இருக்கிறது. தேவையில்லாமல் ஒரு சுமையை இந்த அரசின் மீதும் தேர்தலின் மீதும் ஏற்றக்கூடிய ஒன்றாகதான் இந்த மசோதா இருக்கிறது'' என்றார்.