Skip to main content

“அரசுப் பள்ளிகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவோம் என்பதெல்லாம் பயனற்ற முழக்கமாகவே இருக்கும்” - அன்புமணி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

"It will be a useless slogan to provide world class education in government schools" - Anbumani

 

“ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக பாடத்திட்டங்களும், பாட நூல்களும் உள்ள நிலையில், ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். இதைக் கூட செய்யாமல் 5 வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர், மூன்று வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவோம் என்பதெல்லாம் பயனற்ற முழக்கமாகவே இருக்கும். ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே நீடிக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

மேலும் அந்த அறிக்கையில் அவர், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.

 

தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும். இத்தகைய பள்ளிகளின் மாணவர்களால் கடினமான மேல்நிலை மற்றும் உயர்கல்வியையும், போட்டித் தேர்வுகளையும் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

 

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடந்த 2013-14 ஆம் ஆண்டுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 4863 ஆசிரியர் பணியிடங்கள் கடந்த ஆண்டு நிலவரப்படி காலியாக உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தொடக்கப் பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்காக 4,500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் கூடுதலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த வகையில் மட்டும் சுமார் 11 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வளவு ஆசிரியர்களை நியமித்தால் கூட அரசு அனுமதித்த பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடியும். அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள்.

 

அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது மட்டும் தான் அரசின் நோக்கமாகவும், இலக்காகவும் இருக்கிறதே தவிர, வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படைத் தேவையை நிறைவேற்ற அரசு முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக பாடத்திட்டங்களும், பாட நூல்களும் உள்ள நிலையில், ஒவ்வொரு வகுப்புக்கும் ஓர் ஆசிரியர் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். இதைக் கூட செய்யாமல் 5 வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர், மூன்று வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவோம் என்பதெல்லாம் பயனற்ற முழக்கமாகவே இருக்கும். ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே நீடிக்கும்.

 

தமிழ்நாட்டில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன. இவை அனைத்தையும் தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை, அண்மையில் வெளியிட்ட  ஆவணத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் எனும் போது, மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் வாழும் வட மாவட்டங்களில் மட்டும் தரமான கல்வி மறுக்கப்படுவது ஏன்? வகுப்புக்கு ஓர் ஆசிரியரைக் கூட நியமிக்காமல் கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதனால் பயன் ஏற்படாது.

 

தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவதை ஈராண்டு திட்டமாக செயல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மட்டும் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர் இல்லாத நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளையும் கணக்கில் கொண்டால்  இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அந்த இடங்களை நிரப்பும் வகையில், ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 80 ஆயிரம் பேருக்கும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.