tax

Advertisment

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் வசிப்பவர் ஞானசேகரன். திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரி உட்பட பல இடங்களில் ஹோட்டல், பெட்ரோல் பங்க், வணிகவளாகம், ரியல் எஸ்டேட் என பல தொழில்கள் செய்து வருகிறார். ஜெ. உயிருடன் இருந்தவரை அதிமுகவில் இருந்தவர், அவர் மறைவுக்கு பின் அதிமுக சிதறு தேங்காயாக சிதறியபின், தினகரனின் அமமுக கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அமமுக கட்சியில் மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 7-ம் தேதி மாலை முதல் அவரது தொழில் சார்ந்த இடங்கள், வீடு உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

வருமானத்தை கணக்கு காட்டாமல் மறைத்தது, அந்த கறுப்பு பணத்தை கொண்டு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடப்பதாக தகவல்கள் கசிகின்றன. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த ரெய்டில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisment

வரும் பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியை இவர் கேட்கும் முடிவில் இருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை குறிவைத்து வருமானவரித்துறை பாய்ந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.