
தமிழ்நாட்டிலேயே மிக அதிக வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர் கோபாலகிருஷ்ணனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சந்தித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான வயதில், 107 வயதில் ஓய்வூதியம் பெறக்கூடிய பெரியவர் ஐயா கோபாலகிருஷ்ணனை நாங்கள் இன்று சந்தித்தோம். நானும் நம்முடைய ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சந்தித்தோம். தமிழ்நாட்டில் நூறு வயதிற்கும் மேற்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய கருவூலத்துறையின் அதிகாரிகள் நேரடியாகச் சென்று அவர்களிடத்தில் ஓய்வூதிய தகுதி நீட்டிப்பு சான்றிதழ் வழங்குவார்கள்.
பெரியவர் கோபாலகிருஷ்ணன் 1916 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். முதல் கட்டமாக இந்திய ராணுவத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றி பிறகு சுங்கத் துறையில் பணியாற்றி பிறகு காவல்துறையிலும் அவர் பணியாற்றி இருக்கிறார். 72 ஆம் ஆண்டிலிருந்து அரசினுடைய ஓய்வூதியத்தைப் பெற்றிருக்கிறார். 107 வயதில் இருக்கக்கூடிய பெரியவரான அவரை நாங்கள் இன்றைக்கு நேரில் சந்தித்து சான்றிதழை வழங்கி பெருமையடைந்திருக்கிறோம். முதலமைச்சர் தன்னுடைய அன்பான வாழ்த்துக்களையும் அவருக்கு நேரடியாகத் தெரிவித்து இருக்கிறார்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள், 'தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா' என்ற கேள்விக்கு, “அது அரசு பரிசீலனையில் இருக்கிறது'' என்றார்.
திருவாரூரில் கேந்திரிய பள்ளியில் தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ''எங்கே இருந்தாலும் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது. இதுபோன்று சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் தமிழ்நாட்டில் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது'' என்றார்.