
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள தமிழக முதல்வர், '40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் தமிழகம் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது. இதற்காக நன்கொடை வழங்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.
மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புபவர்கள் தலைமைச் செயலகத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்புக் கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பலாம், வெளிநாட்டு பங்களிப்புக்கான ஷிப்ட் குறியீடு உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இசிஎஸ் மூலம் ஆன்லைனில் தொகை அனுப்பும் பங்களிப்பாளர்கள் வருமான வரிவிலக்கு பெற நன்கொடையாளர் பெயர், தொகை, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் யுபிஐ மூலம் பணம் அனுப்ப விரும்புவோர் tncmprf@iob (phonepay, google pay, paytm, amazon pay, mobikwik ) என்றமுகவரியில் போன் பே, கூகுள் பே உள்ளிட்ட மொபைல் செயலிகள் மூலமாகவும் நன்கொடைகளை வழங்கலாம். காசோலை அல்லது வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் 'அரசு இணைச் செயலாளர் & பொருளாளர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, தலைமைச் செயலகம், சென்னை-60009, தமிழ்நாடு, இந்தியா' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)