Advertisment

'25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்'- பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய கூட்டு நடவடிக்கை குழு 

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டது.

Advertisment

சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். அதனையடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

Advertisment

அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார். ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தனது கருத்துகளை எடுத்துரைத்தார். பின்னர், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, சமூகப் பொருளாதார நலத்திட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய எந்தவொரு மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும், ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை பல்வேறு மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று, ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தின் வாயிலாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், '42வது, 84வது, 87வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திறம்பட செயல்படுத்திய மாநிலங்களைப் பாதுகாப்பதும் / ஊக்குவிப்பதும், தேசிய மக்கள்தொகையை நிலைப்படுத்தலும் ஆகும். இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்புத் தள்ளிவைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்தி, அதன் விளைவாக மக்கள்தொகை விகிதம் குறைந்துள்ள மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக ஒன்றிய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு, மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக் குழு, நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குத் தங்களது கருத்தைத் தெரிவிக்கும்.

கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சினையில் அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றி, அதனை ஒன்றிய அரசுக்குத் தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஒருங்கிணைந்த பொதுகருத்தை உருவாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறும், அந்த நடவடிக்கைகளின் விளைவுகளும் குறித்த தகவல்களை அந்தந்த மாநில பொதுமக்களிடையே பரப்புவதற்கு கூட்டு நடவடிக்கைக் குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Delimitation meetings
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe