
அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் திண்டுக்கல் மாணவி ஓவியா தமிழ்நாட்டில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
‘இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச்’ அமைப்பு ஆண்டுதோறும் எம்.வி.எஸ். படிப்புக்காக கால்நடைதுறைக்கான இந்திய அளவிலான தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 17இல் இந்திய அளவில் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், திண்டுக்கல் மாணவி ஓவியா தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவியைக் கால்நடைத்துறை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினர். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது சம்பந்தமாக மாணவி ஓவியாவிடம் கேட்டபோது, “தமிழகத்தில் திருநெல்வேலி கால்நடை பல்கலைக்கழகத்தில் நான் பி.வி.எஸ்.சி. படித்துள்ளேன். முதுநிலைத் தேர்வுக்கு அகில இந்திய அளவில் நடந்த ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். கால்நடைத்துறை என்றால் பலர் ஓட்டம் பிடிக்கின்றனர். அனைவருமே எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், விலங்குகளைப் பற்றி; வாயில்லா ஜீவன்களைப் பற்றி படிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் பாக்கியமாக கருத வேண்டும்.

இந்தப் படிப்பை ரசித்துப் படித்தால், நாம் உயர்வு அடையலாம். இந்தப் படிப்பில் பல உயர்வுகளை அடைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதனால் பல தேர்வுகளை எழுத உள்ளேன். ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனக்கு அனைத்து தரப்பினரும் உதவினார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் உதவியதால் நான் சாதனை படைத்துள்ளேன். இந்த சாதனையை இன்னும் தொடர்வேன். மேலும், எனக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.