Skip to main content

குற்றவாளி எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பளிப்பது மகா வெட்கக்கேடானது - கி.வீரமணி

svs

 

தமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என்றும், இவற்றை முன்கூட்டியே அறிந்து தமிழக அரசும், காவல்துறையும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

 

குன்னமிர்டல் எழுதிய ஆசிய நாடகம்
 ஜாதி - தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய நாட்டின் வளர்ச்சி - எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், பெருமளவில் வளர்ச்சி ஏற்படவே ஏற்படாது என்றார் - சிங்கப்பூரை நவீன நாடாக ஆக்கிய மிகப்பெரிய அரசியல் விற்பன்னரான லீக் குவான் க்யூ (Lee Kuan Que) அவர்கள் - இந்தியாவைப்பற்றி சில ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதிய நூல் ஒன்றில்.

 

ஜாதியை ஒழிக்கவேண்டுமானால்
சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்

ஆசிய நாடகம் (‘Asian Drama’) என்ற தலைப்பிட்டு எழுதிய பொருளாதார நூல் ஒன்றில், நோபல் பரிசு பெற்ற சுவீடன் நாட்டு அறிஞரான குன்னர்மிர்டல் அவர்கள், இந்தியாவில் ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அதற்கு ஒரு சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும் (Caste is deeply entrenched in Indian Tradition and it could be removed only by a drastic surgery) என்று எழுதினார்! (இது தனி நூல்)  தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும், அவர்களது கருத்துகளுக்கு (மேற்காட்டியபடி) நோபல் பரிசு கிடைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்!

 

சமூக விரோத செயல் வேறு உண்டா?

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காலூன்றிட முடியவில்லை என்பதால், ஒரு குறுக்கு வழியில் அமைதிப் பூங்காவான தமிழ் மண்ணில் - பெரியார் மண்ணில் - ஜாதி, மதக் கலவரங்களை - திருவிழாக்களைப் பயன்படுத்தி - இரண்டு தனி நபர் அல்லது சில நபர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறுகளை வைத்து, ஜாதி, மதக் கலவரங்களாகவே மாற்றி, அதில் குளிர் காய்ந்து தங்களது அமைப்பிற்கு ஆட்களைச் சேர்க்கும் அற்பத்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இதைவிட மிகப்பெரிய சமூக விரோத செயல் வேறு உண்டா? இத்தகையவர்களைவிட பெரும் விஷக் கிருமிகள் வேறு எங்கு உண்டு?

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற கிராமத்து விழாவில், தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாகி, பிறகு திட்டமிட்ட ஜாதி ஆணவப் படுகொலைகளாக மாற்றப்பட்டு, தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மூவர் வெட்டி வீழ்த்தப்பட்டதும், கலவர பூமியாக அப்பகுதி மாற்றப்பட்டதும் எவ்வகையில் நியாயம்? (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா?)

 

முதலைக் கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஏடு!

அதுபோலவே, தேனி அருகில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதர்களும், சிறுபான்மை சகோதரர்களும், இரண்டு கைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் கேலிக்கூத்துப்போல நிகழ்வுகள் (திருவிழாக்களின்போது) நடைபெற்றதை - ஆர்.எஸ்.எஸ். ஏடு பெரிதாக ஊதிப் பெருக்கி, ஆகா என்ன அநியாயம்? என்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் விடுகின்றது.

குஜராத் உன்னாவில், உ.பி.யில் இன்னும் பற்பல இடங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் கலவரம் செய்யும் இந்தக் காவிக் கும்பல், இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிரச்சினை என்றவுடன், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கிட முயலுகின்றது. தமிழ்நாடு அரசின் காவல்துறை சட்டம் - ஒழுங்குப் பிரிவும், நுண்ணறிவுப் பிரிவும் ஒருங்கிணைந்து முன்கூட்டியே மோப்பம் பிடித்தும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வருமுன்னர் காக்கும் முறைகளைக் கையாள முன்வரவேண்டும்!

 

தமிழக அரசிற்கும் - காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதா?

ஒரு சார்பு நிலை கூடவே கூடாது! தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா? அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே! எடுத்துக்காட்டாக எஸ்.வி.சேகர் என்ற தேடப்படும் குற்றவாளி காவல்துறை பாதுகாப்புடன் ஜாலியாக காரில் பவனி வருவது) தமிழக அரசிற்கோ பெருமை சேர்ப்பதா?

குற்றவாளிக்குப் பாதுகாப்பளிப்பது மகா வெட்கக்கேடானது

ஒரு பாடகர் கோவன்மீதும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்மீதும் பாயும் சட்டம், பெண் செய்தியாளர்களைப்பற்றி அவதூறு பரப்பிய அசிங்க மனிதர் ஒருவரது முன்ஜாமீன் மனு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டும்கூட, சும்மா வேடிக்கை பார்ப்பதும், மாறாக குற்றவாளிக்கே பாதுகாப்பளிப்பதும் மகாவெட்கக்கேடானதல்லவா?
தூத்துக்குடியில் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள்மீது வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

 

ஜனநாயகத்தில் துப்பாக்கித் துரைத்தனம் விரும்பத்தக்கதா? அதனால் ஆட்சிகள் நீடிப்பதற்குப் பதிலாக தங்கள் நாட்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளவேண்டி அல்லவா நேரிடும்!
ஜாதி முறையின் தத்துவமே, மதங்களின் வரலாறே கலவரம், வன்முறை இவைகளைத் வைத்துத்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்; பிரிவுக்குள் பிரிவு - அடுக்குமுறை -Graded inequality   என்பதுதானே ஜாதியின் கோட்பாடு!

 

பார்ப்பனியம் - ஆரியம் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்

கலவரம் ஏற்படுத்தும் பார்ப்பனியம் - ஆரியம் நேரிடையாக கண்ணுக்குத் தெரியாமல் - கிருமிகளைப்போல் நோயை உருவாக்கி, உள்ளே ஒளிந்துகொள்ளும் வித்தையை - விஞ்ஞான ரீதியாக செய்கிறது. இது புரியாத அப்பாவிகளும், அறியாதோரும், பார்ப்பனர் எங்களைத் தாக்குவதில்லை; மற்ற ஜாதிக்காரர்கள்தானே தாக்குகிறார்கள் என்றால், பக்கத்தில் இருப்பவர்களோடுதான் உரசல் ஏற்படுமே தவிர, தள்ளி மேலே இருப்பவர்களுடன் நேரிடையாக மோதல் வராதே!

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும்

இதை உணராமல், ஜாதி மதக் கலவரங்களை நமது சகோதரர்களாக ஊரில் நிரந்தரமாக நட்புறவுடன் வாழவேண்டியவர்கள் பகைமைத்தீ அழித்துவிட இடம் கொடுக்காமல், சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும், தமிழக அரசின் காவல்துறையும் நோயின் மூல காரணத்தை அகற்றி, தீர்வு கண்டு - தமிழ்நாட்டில் ஜாதி, மதக் கலவரத்திற்கு இடமின்றி,சமூக நல்லுறவும், நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும் - அலட்சியம் வேண்டாம்!’’
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்