
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன இந்நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி, நிறுவனத்தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா கூறியுள்ளதாவது.
''பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது சமூகத்தின் உச்சகட்ட அவலம். தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அளித்த புகாரை பள்ளி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மிகவும் கண்டனத்துக்குரியது
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டே இருக்கிறது .ஒரு சில குற்றங்கள் மட்டுமே வழக்குகளாக மாற்றப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வழக்குகள் நிலுவையிலும் பல வழக்குகள் முதல் தகவல் அறிக்கை கூட இல்லாமல் முடிந்து போயுள்ளது.
பெண்கள் எல்லா துறையிலும் சாதிக்க துடிக்கும் இந்த காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது பெண்களின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமையும். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர் இனி ஆசிரியராக பணி புரிய கூடாது என்ற உத்தரவினை நீதிமன்றம் வழங்க வேண்டும். தன்னிச்சையாகவே நீதிமன்றம் இந்த வழக்கினை முன்வந்து எடுத்து நடத்த வேண்டும்.
பாலியல் குற்றம் என்பது வன்புணர்வு மட்டுமல்ல. ஆபாசமான நோக்கோடு பெண்களை பார்ப்பதும் மனதளவில் பெண்களை காயப்படுத்துவதும் அடங்கும். இது போன்று இனி ஒரு நிகழ்வு நிகழாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கவனத்தில் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்''எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us