
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (25.03.2021) திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். எ.வ.வேலுவின் கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களிலும், அதேபோல் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக புகாரளிக்கப்பட்டதால் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தொடங்கிய சோதனை இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது.
Follow Us