Is it possible to provide a mask for those attending a market, wedding, or funeral? - Order to the Government of Tamil Nadu to consider!

Advertisment

முகக்கவசம் மற்றும் தனிமனித விலகலைப் பின்பற்றாவிட்டால் கரோனா தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்ற ஐ.சி.எம்.ஆர். அறிக்கையைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், சந்தை, திருமணம், இறுதிச் சடங்கு ஆகிய இடங்களில் கூடுபவர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மேற்கொண்ட கரோனா சோதனை விவரங்கள், படுக்கைகள் காலியாக உள்ள மருத்துவமனைகள், மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்கக்கோரி, மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அளிக்கும் தகவலில் முரண்பாடுகள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகிய விதிகளைப் பின்பற்றுவதில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது.

Advertisment

அரசுத் தரப்பில், கரோனா தடுப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், தொற்று பாதித்தவர் குறித்த விவரங்களை தினசரி அடிப்படையில் வெளியிட்டு வருகிறோம். தமிழகத்தில் உள்ள 133 ஆய்வகங்களில், இதுவரை 34 லட்சத்து 32 ஆயிரத்து 25 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 நிலவரப்படி 314520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் குணமடைந்து திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு அபராதம் விதித்து அரசாணை பிறப்பித்திருந்தாலும், அது முறையாக அமல்படுத்தபடவில்லை என மனுதாரர் கூறுவதால், மக்கள் கூடும் இடங்களில் அதிகாரி ஒருவரை அனுப்பி முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி ஆகிய விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென உத்தரவிட்டனர். மேலும், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றாவிட்டால் கரோனா தாக்கம் அதிகரிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சந்தை, திருமணம், இறுதிச் சடங்கு ஆகிய இடங்களுக்கு செல்பவர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கு சாத்தியமுள்ளதா எனப் பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.