Advertisment

ரயில்வேயில் ஒரு லட்சம் இளைஞர்களின் வாய்ப்பை பறிப்பதா?  அன்புமணி ராமதாஸ் கண்டனம்

an

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’இந்தியத் தொடர்வண்டித்துறையின் பல்வேறு பிரிவுகளில் ஓய்வு பெற்ற ஒரு லட்சம் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் அப்பட்டமாக பறிக்கப்பட்டுள்ளன.

Advertisment

உலகில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே துறை தான். இந்திய ரயில்வேத்துறையில் 14 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது பஹ்ரைன், மாலத்தீவு, பூடான், மொரிஷியஸ் உள்ளிட்ட 83 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும். படித்த இளைஞர்களுக்கு பொதுத்துறையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்க்காமல் இருப்பதற்கு காரணம் இந்திய ரயில்வே தான். ஆனால், இந்த நம்பிக்கையை பறிக்கும் வகையில் ஒரு லட்சம் பணிகளில் ஓய்வு பெற்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்திய ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் 2.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் பணியை தொடர்வண்டித்துறை நீண்டகாலமாக தாமதித்து வந்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த பணியிடங்களில் ஒரு லட்சம் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படுகிறது. இதுதவிர அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள 2.30 லட்சம் காலியிடங்களையும் தகுதியான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு நிரப்பியிருந்தால் அதே எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கும். அதற்கு மாறாக ஒரு லட்சம் பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்தியதால் ஒரு லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 1.30 லட்சம் பணியிடங்களையும் ஓய்வு பெற்றவர்களைக் கொண்டே நிரப்ப ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. தெற்கு தொடர்வண்டித் துறையில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவை தவிர மேலும் 1279 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.

ரயில்வேத் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்ய தகுதித் தேர்வு, மருத்துவ ஆய்வு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதாகவும், இவற்றுக்கு அதிக காலம் ஆவதால் தற்காலிகமாக ஓய்வு பெற்றவர்கள் பணியமர்த்தப்படுவதாகவும் ரயில்வேத் துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு விட்ட நிலையில், எந்தெந்த மாதத்தில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு பேர் ஓய்வு பெறப் போகிறார்கள் என்பதை எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல்களின் அடிப்படையில் 3 மாதங்கள் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆள்தேர்வை நடத்தினால் காலியிடங்களை உடனுக்குடன் நிரப்ப முடியும். அதை செய்யாமல், புதிய பணியாளர்களை நியமிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாகவே ஓய்வுபெற்றவர்கள் நியமிக்கப்படுவதாக கூறுவது தவறு.

அதுமட்டுமின்றி, காலியிடங்களில் பணியமர்த்தப்பட்ட ஓய்வு பெற்றவர்களில் பலர் ஓராண்டுக்கும் மேலாக பணியில் நீடிக்கின்றனர். அவர்கள் 65 வயது வரை பணியில் நீடிக்கலாம் என்பதால் 5 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, திட்டமிட்டே ஓய்வு பெற்றவர்கள் பணியமர்த்தப் படுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. இது ஒருபுறமிருக்க 60 வயதைக் கடந்தவர்களுக்கு பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கும் என்பதால் தொடர்வண்டி இயக்கத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது.

எனவே, ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 2.30 லட்சம் பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். எத்தனை பணியிடங்களை புதிய பணியாளர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையையும் இந்திய தொடர்வண்டி வாரியம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். ’’

anbumani ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe