Skip to main content

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்..!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

It is a pity that farmers' paddy purchasing centers get wet in the rain ..!

 

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடை சீசன் முடிந்து விவசாயிகள் ஆங்காங்கே உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளனர். அங்கு எடை போட்டு விற்பனைச் செய்வதற்கு காலதாமதம் ஆவதால் விவசாயிகள் தங்கள் நெல்லை ஆங்காங்கே குவியலாகக் கொட்டி வைத்து உள்ளனர். 

 

தற்போது பெய்து வரும் கோடைமழையில் நெல் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். உதாரணமாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திலும், அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேல் குமாரமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் பல நாட்களாக எடை போட்டு விலைக்கு எடுத்துக் கொள்ளாமல் உள்ளது.  இதனால், ஆங்காங்கே திறந்தவெளியில் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பெய்துவரும் மழையால் அந்த நெல் மூட்டைகள் முழுவதும் நனைந்து நாசமாகி வருகின்றன. 

 

நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை மழையில் நனைய விடாமல் விரைவாகக் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகள் விளைவித்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திட்டக்குடி பகுதியில் உள்ள நிதித்தம், பெருமுளை, உட்பட பல்வேறு ஊர்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்களைச் சமீபத்தில் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்துவைத்தார். தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டிருந்தாலும், அதிகாரிகள் அதிக அக்கறையுடன் விவசாயிகள் விளைய வைத்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு வந்த உடன் உடனடியாக எடைபோட்டு அவர்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்கி மண்ணான 126 டன் நெல்; சட்டத்துறை அமைச்சர் தொகுதியில் அவலம்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

மனிதனின் வயிற்றுப் பசியை போக்கி பட்டினியை இல்லாமல் செய்ய ஒவ்வொரு விவசாயியும் சேற்றில் இறங்கி உழுது, நடவு நட்டு, பூச்சி, இயற்கை சீற்றங்களில் பாதுகாத்து வியர்வைத் துளிகளை நெல்மணிகளாக கொடுக்கிறார்கள். இத்தனை உழைப்பிற்கு பின்னால் வரும் நெல் மணிகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொடுக்கும் போது ஒரு மூடைக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்து பல நாட்கள் காத்திருந்து பணம் வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். இதனை சாதகமாக பயன்படுத்தும் தனியார் நெல் வியாபாரிகள் விவசாயிகளின் வயல்களுக்கே சென்று குறைந்த விலைக்கு வாங்கி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்கும் சம்பவங்களும் உண்டு.

 

கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை வட்ட அளவிலான பாதுகாப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாத்து அரிசி அறவைக்கும் மார்டன் ரைஸ் மில்களுக்கும் அனுப்பும் பணியை செய்ய அதிகாரிகள் குழுவே உள்ளது. இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகளை திறந்தவெளி குடோன்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதுகாப்பின்றி வைத்து, மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூடைகள் நனைந்து நாசமாகி, பல லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பும் ஏற்படுகிறது.

 

இந்த வகையில் தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் தொகுதியில் உள்ள திருமயம் தாலுகா வட்டக்கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 4507 மூடைகள் அதாவது ரூ.40 லட்சம் மதிப்புள்ள 126 டன் நெல் மணிகள் மழையில் நனைந்து மக்கி மண்ணோடு மண்ணாகிப் போனது. இந்த சம்பவத்தில் கிடங்கு பாதுகாப்பு அலுவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

மழையில் நனைந்து மக்கி மண்ணோடு மண்ணான மனிதர்கள் பயன்படுத்த தகுதியற்ற 4,507 இந்த நெல் மூட்டைகளை மண்ணோடு மண்ணாக பாதுகாப்பு குடோனில் அள்ளி குவித்து வைத்து அதனை தனியார் வியாபாரிகளுக்கு கால்நடை தீவனங்களுக்கு விற்பனை செய்ய டெண்டர் அறிவித்திருந்த நிலையில், நேற்று நவம்பர் 20 ந் தேதி டெண்டர் கடைசி நாள் இன்று 21 ந் தேதி டெண்டர் திறப்பு நாள். ஆனால் ஒருவர் ஒரு வியாபாரி கூட டெண்டர் எடுக்க முன்வரவில்லை.

 

விவசாயிகளின் வியர்வை துளியில் விளைந்து அதிகாரிகள் அலட்சியத்தால் மண்ணாகிப் போன நெல் மணிகளை குப்பையாக்கி அரசு பணத்தை விரயமாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை என்னவோ? தனியார் மில் நிர்வாகங்களை அணுகும் அதிகாரிகள் கொஞ்சமாவது டெண்டர் எடுங்கள். அரசுக்கு கணக்கு காட்டணும், பிறகு நல்ல நெல் அறவைக்கு வரும் போது ஈடுசெய்கிறோம் என்று கெஞ்சி வருகிறார்களாம். ஆனால் மில் நிர்வாகத்தினரோ மண்ணை அள்ளிப் போய் நாங்க என்ன செய்றது என்கிறார்களாம். இதனால் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் திணறி வருகின்றனர். அரசுக்கு கணக்கு காட்ட குடோன்களில் அள்ளி குவித்து வைத்துள்ள மக்கிய நெல்மணிகளை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கின்றனர் மாவட்ட அதிகாரிகள்.

 

விவசாயிகளிடம் ஈரப்பதம், கமிஷன் என்று கறார் காட்டும் அதிகாரிகள், இப்பொழுது இவ்வளவு மூடைகளை வீணாக்கி உள்ளதை ஏற்க முடியாது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது தொகுதியில் நடந்த அவலத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

 

 

Next Story

புதிய முயற்சியில் நெல் கொள்முதல் நிலையம்; மகிழ்ச்சியில் விவசாயிகள் 

Published on 16/02/2023 | Edited on 16/02/2023

 

paddy consuming center  in pudukkottai district annavasal union 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையம் ஒன்றில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வரை கமிசனாக கொடுக்க வேண்டியுள்ளது. கமிஷன் கொடுக்க மறுத்தால் நெல் கொள்முதலை நிறுத்துவது வழக்கமான குற்றச்சாட்டுகளாக உள்ளது. அதே போல அரசியல்வாதிகளும் கமிஷனுக்காக கொள்முதல் நிலையங்களை கொண்டு வருவதும் வழக்கம். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள பரப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கமிஷன் இல்லை; விவசாயிகளின் நெல் மட்டுமே கொள்முதல்; அரசியல்வாதிகளுக்கு இடமில்லை; வரிசைப்படி கொள்முதல்; யாருக்கும் முன்னுரிமை கிடையாது; வியாபாரிகளின் நெல் கொள்முதல் இல்லை என விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் நெல் கொள்முதல் சங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க 4 கண்காணிப்பு கேமராக்களை வைத்து ‘நீரிணை பயன்படுத்துவோர் சங்கமே’ சிறப்பாக நடத்தி வருகிறது.