ADVERTISEMENT

“ஆளுநரை பற்றி பேசுவது வேதனையாக இருக்கிறது” - வெளிநடப்புக்கு காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன்

03:40 PM Nov 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், “தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள். 10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்; ஜனநாயக விரோதமாகும்; மக்கள் விரோதமாகும்; மனசாட்சி விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர்'' என்றார்.

தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''நமது வரிகளை வைத்து அனைத்து பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் இயங்கி வருகிறது. மூன்று வருடத்திற்கு பிறகு ஆளுநர் வித் ஹோல்டு (With hold) என எழுதி அனுப்புவதில் உள்நோக்கம் இருப்பதுதான் இதிலே வெளிப்படையாக தெரிகிறது. எல்லோரும் இதைத்தான் சொல்கிறார்கள். பாஜகவினுடைய சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சரியான பதில் இல்லாததால் வெளிநடப்பு செய்திருக்கிறார். இவர் வெளிநடப்பு செய்வதை பார்த்தால், தமிழ்நாட்டில் யாருமே ஆளுநரின் செய்கை சரி என்று சொல்லாத நேரத்தில் இவர்கள் வெளிநடப்பு செய்வது இவர்கள் சொல்லித்தான் அவர் செயல்படுகிறார் என்று அர்த்தம் வந்துவிடும். அப்படி ஒரு நோக்கம் வந்துவிடும். இவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை'' என்றார்.

ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களும் இன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், ‘அரசினர் தீர்மானங்களை கண்டித்தும், தொடர்ந்து அமைச்சர்கள் சட்டமன்றத்தில் வைக்க இருக்கின்ற தீர்மானங்களை கண்டித்தும் பாஜகவை சேர்ந்த நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இப்பொழுதும் சட்டமன்றத்தில் ஒரு மிதமான போக்கு இல்லாமல் ஆளுநரை பற்றியும், மத்திய அரசை பற்றியும் பேசவிட்டு வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இது வருந்தத்தக்கது. வேதனைக்குரிய விஷயம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT