
தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசைக் கண்டித்தும் இன்று கர்நாடகா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,''கர்நாடகாவில் தமிழகத்திற்கு வழங்க கூடிய அளவிற்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் தர மாட்டேன் என்று சொல்வது நியாயமல்ல. இரண்டு வகையிலும் நியாயமல்ல. ஒரு ஆற்றினுடைய போக்கில் கடைசி 'டைல் எண்ட்' என்பார்கள். டைல் எண்ட்டில் இருபவர்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். அந்த இயற்கை நீதியையும் அவர்கள் பின்பற்ற மாட்டேன் என்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கிறது; நெற்பயிர்கள் காய்கிறது என்று நேரடியாக நம்முடைய முதல்வர் அறிக்கை விடுகிறார் அதற்கும் செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.
காவிரி ஒழுங்காற்றுக் குழு செல்வதையும் ஏற்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு அண்டை மாநிலங்கள் அதுவும் ஒன்றோடொன்று ஒட்டி இருக்கக்கூடிய மாநிலங்கள். இங்கு இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவில் வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான கர்நாடக பொதுமக்கள் இங்கே வாழ்கிறார்கள். நித்தம் நித்தம் போக்குவரத்து இருக்கிறது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழும் மக்கள் பயம் இன்றி வாழ வேண்டும். அதை விட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மதிக்க மாட்டோம்; காவிரி ஒழுங்காற்று, குழு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மதிக்க மாட்டோம்; தமிழக முதல்வர் முன்வைத்த வேண்டுகோளையும் மதிக்க மாட்டோம் என்று சொல்வது நியாயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கும் சொல்லுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. நீண்ட கால அனுபவம் பெற்றவர்கள். அங்கு இருக்கக்கூடிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார், அதேபோல் அரசியலில் தேவகவுடா காலத்திலிருந்து அனைத்து நடைமுறையும் அறிந்த சித்தராமையா என இருவர் மீதும் நான் இன்றைய வரை நான் மதிப்பு கொண்டிருக்கிறேன். ஆனால் எது எப்படி இருந்தாலும் இன்றைக்கு உச்சநீதிமன்றத்திற்கும், காவிரி ஒழுங்காற்று குழுவுக்கும் கட்டுப்பட்டு நீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நன்றி'' என்றார்.