சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜெயபால் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,, “திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 8க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாகக் கல் குவாரிகள் நடத்தி வருகின்றனர். இது குறித்து மனு அளித்தும் எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த முறை இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “8க்கும் மேற்பட்ட சட்டவிரோத குவாரிகளை ஏன் தடுக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பினர்.
அதோடு, “இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளிட் அமர்வில் இன்று (16.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆஜராகியிருந்தார். அவர், “இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆய்வு செய்து 8 குவாரிகளில் 3 குவாரிகளை மூடிவிட்டோம். மற்ற 5 குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கனிம வளம் என்பது இயற்கையின் சொத்து. எனவே சட்ட விரோதமாக அந்த கனிம வளங்களை யார் கொள்ளையடித்தாலும் அதைத் தடுப்பது அதிகாரிகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே இதுபோன்ற சட்ட விரோத குவாரிகளை ஒருபோதும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி சட்ட விரோத குவாரிகளை செயல்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமை” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/16/madurai-high-court-2025-07-16-16-35-36.jpg)