
திருவண்ணாமலை 2668 அடி உயரமுள்ள தீபமலை கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல் மழையில் மலைச்சரிவை ஏற்படுத்தியது. மலையைச் சுற்றி 7 இடங்களில் இந்த மலைச்சரிவு சிறியதாக, பெரியதாக ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் மலையின் கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் வீடு கட்டி வசித்துவருகின்றனர் பொதுமக்கள். இதில் தென்கிழக்கு பகுதியில் நடைபெற்ற மண்சரிவில் இரண்டு வீடுகள் முற்றிலும் நொறுங்கியது. இதில் வீட்டுக்குள் இருந்த 2 பெரியவர்கள், 5 சிறுவர்கள் என 7 பேர் உயிரிழந்தனர். மழை விட்ட பிறகும் இரண்டு முறை மலையில் மண் சரிவு பெரியளவில் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் மலையேறும் வழியில் மலைமீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இது திருவண்ணாமலை மக்கள் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பலலட்ச கணக்கான பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 13ஆம் தேதி தீப மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.மகா தீபத்தன்று மலை மீது சென்று மலை உச்சியில் கொப்பறை வைத்து தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 5 அடி உயரம்முள்ள கொப்பரை, 4500 லிட்டர் நெய், 1500 மீட்டர் காடதுணி தீபம் கோவிலில் இருந்து குறிப்பிட்ட சமூக பிரிவினர் மலை உச்சிக்கு எடுத்துச்சென்று தீபம் ஏற்றுவார்கள். இது காலம் காலமாக நடந்துவரும் நடைமுறை. 11 நாட்களுக்கு மலை உச்சியில் தீபம் எரியும்.
இந்தாண்டு மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து ஆராய தமிழ்நாடு அரசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல் துறைத் தலைவர் பிரேமலதா, புவியியல் மற்றும் சுரங்கத் துறை மண்டல இணை இயக்குநர் ஆறுமுக நயினார், இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை முதுநிலை புவியியல் வல்லுநர் ஜெயபால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள் லட்சுமி ராம் பிரசாத், சுரேஷ்குமார், அருள்முருகன், தமிழரசன் உட்பட 8 பேர் கொண்ட வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு கடந்த 8-ஆம் தேதி மலை உச்சிவரை சென்று ஆய்வு செய்தது.
ஆய்வுக்குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம், மலை உச்சியில் இருந்து 200 மீட்டர் கீழே 100 மீட்டர் தூரத்துக்குப் பக்தர்கள் வரும் வழியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதோடு பலயிடங்களில் மண் சரிவு ஏற்பட்டு கற்கள் உருண்டு வந்து மரங்களால் தடுக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் எப்போது உருண்டு வரும் எனத்தெரியாது. அதேபோல் புதைகுழிகள் உள்ளன. ஆய்வுக்குழு தங்களது அறிக்கையை அரசிடம் வழங்கும், அரசு முடிவு எடுக்கும் என்றார்.

மகாதீபத்தன்று கிரிவலம், மலை ஏறுதல் என்பது காலம் காலமாக நடந்துவருகிறது. மலையேறி உச்சியை அடைந்து தீபம் ஏற்றும் இடத்தை வணங்கிவிட்டு கீழே இறங்கிவருபவர்கள் அகல்விளக்கு வைத்து மலையில் தீபம் ஏற்றுவதும், கீழே இறங்கும்போது இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை என்பதற்காக மலைமீது தீ வைத்துவிட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. இதனால் காவல்துறை முக்கிய இடங்களில் மலைமீது போகஸ் லைட் அமைத்தனர், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதோடு மலையேறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பேப்பர்கள், பாட்டில்களால் அங்கு வீசப்பட்டு அந்த பாதை முழுவதும் அசுத்தமாகின. தொடர்ந்து இதுப்போன்ற செயல்கள் நடைபெற்றே வந்ததால் சிலர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தீபத்தன்று 2,500 பேர் மட்டும் மலை ஏற அனுமதிக்கவேண்டும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதற்காக தீபத்தன்று காலை மாவட்ட நிர்வாகம் டோக்கன் வழங்கியது. டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டும் மலையேற அனுமதித்தது. 2500 பேர் எனச்சொல்லப்பட்டாலும் 1 லட்சம் பேராவது மலையேறிவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலை மீது ஏறி ஆய்வு செய்த ஆய்வுக்குழு பக்தர்கள் மலையேற இந்தாண்டு தடை விதித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என தங்களது ஆய்வு அறிக்கையை அளிக்கவுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆய்வு அறிக்கையை ஆய்வு செய்தபின், இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு தடை விதிக்கலாமா? கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கலாமா? என்கிற அரசின் அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படும். இந்தாண்டு பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்படும் என்கிறார்கள் அரசு அதிகாரத்திலுள்ள நமது சோர்ஸ்கள்.