Skip to main content

"இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை.. ஆனால் ஜாக்கிரதை"- அண்ணாமலை!

Published on 16/04/2022 | Edited on 18/04/2022

 

"It does not seem to be true to any extent" - Annamalai!

 

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினை சேர்ந்த சுபைர் என்பவர் நேற்று (15/04/2022) அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இதில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில், இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றுமொரு கார், பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவரின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

 

இந்நிலையில், கேரளாவின் பாலக்காடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் இன்று (16/04/2022) கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ தான் காரணம் என அப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இந்நிலையில், பாப்புலர் ஃ பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை கேரளாவில் மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக பா.ஜ.க.வினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதனையடுத்து, அப்படியொரு நிலை ஒருவேளை ஏற்பட்டால் தமிழகத்தில் பா.ஜ.க.வினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

 

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் பேசியதாக சொல்லப்படும் அந்த ஆடியோவில், "கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால் பா.ஜ.க.வினரும், இந்துத்துவ அமைப்பின் நிர்வாகிகளும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். கேரளாவில் இப்படி நடந்தால் அதன் எதிரொலி அண்டை மாநிலமான தமிழகத்தில் அதிகமாக இருக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் இவ்வமைப்பை தடை செய்வது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வராத நிலையில், அண்ணாமலை பேசியதாக இப்படி ஒரு ஆடியோ பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்