Skip to main content

'பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது' - அதிமுக முன்னாள் நிர்வாகி பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'It is disgusting to see'-Trisha condemns the speech of ADMK ex-executive

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், தற்போது த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பே நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தனது கண்டனத்தை த்ரிஷா தெரிவித்திருந்தார். பின்னர் அது நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

“காங்கிரஸ் கட்சியில் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை” - நடிகை விந்தியா பிரச்சாரம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
actress Vindhya said Congress party has no leadership, no leader

பரங்கிப்பேட்டை அருகே பி. முட்லூர் பகுதியில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து வியாழக்கிழமை மாலை அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .

அப்போது, பேசிய நடிகை விந்தியா, “சிதம்பரம் தொகுதி ஈசனே ஆட்சி செய்கிற, தில்லை காளியம்மன், கோவிந்தராஜ பெருமாள் காத்து நிக்கிற இடம். காடு, கடல், ஆறு உள்ள வலிமையான பூமி. இங்கே நிற்பது புண்ணியம், பேசுவதே பெருமை. இங்கு நியாயம் ஜெயிக்கணும், மக்கள் ஜெயிக்கணும், வெற்றி வேட்பாளர் சந்திரகாசன் ஜெயிக்கணும்.

நாட்டுக்காகவும் ,மக்களுக்காகவும் கட்சி ஆரம்பித்து பணியாற்றுபவர்கள் ஏராளம். ஆனால் 2 சீட்டுக்காக இன மக்களை உசுப்பேத்தி கோபப்பட வைத்து ஏமாத்தி இன மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் திருமாவளவன். இவருக்கு எலக்சன் நேரத்துல கலெக்சன் ஆகுற ஓட்டு பத்தி தான் தெரியும். இன மக்களைப் பற்றி கவலை இல்லை.

எப்ப பார்த்தாலும் புத்தர், அம்பேத்கர் என பேசுவார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதை அதிமுக அரசு அறிவித்ததை திமுக அரசு ரத்து செய்து விட்டது. திருமாவளவன் என்ன செய்தார். புத்தர் போல தவம் இருந்திருக்கலாம். அம்பேத்கர் மாதிரி புரட்சி செய்து இருக்கலாம். ஆனால் இவர் திமுகவிடம் அடிமையாக இருந்து வருகிறார்.

திருமாவளவன் செய்யறது ஒன்னு, சொல்றது ஒன்னு, கோவிலைப் பற்றி கேவலமா பேசுவாரு, தேர்தல் வந்தால் குனிந்து கும்பிடு போடுவார். காங்கிரஸ் தலைவர் பதவியை கொள்கைக்காக தூக்கி எறிந்த அம்பேத்கர் எங்கே? இனம் மானத்தை அடகு வைக்கும் திருமாவளவன் எங்கே?.  தமிழகத்தில் தாமரை எப்படி மலரக் கூடாதோ, அது மாதிரி திமுக கூட்டணியும் வளரக்கூடாது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு பேருமே நாட்டுக்காகவோ, மக்களுக்காகவோ அரசியலில் இல்லை. சுயநலத்திற்காகவும் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர் கொள்கைக்காக இல்லை, கமலஹாசன் திமுகவை எதிர்த்து கட்சி ஆரம்பித்தார்.

தற்பொழுது, ஸ்டாலின் மகன் உதயநிதியிடம் கைகட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வைகோ தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த சைக்கோ. திமுகவை உடைத்து மதிமுக என்ற கட்சியை உருவாக்கினார். அதே திமுகவிடம் ஒத்த சீட்டு கேட்டு கைகட்டி நிற்கிறார். வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை. அவர் சேக்ஸ்பியர் முதல் சிலப்பதிகாரம் வரை கரைத்துக் குடித்தவர். ஸ்டாலினிடம் அவர்  கைகட்டி நிற்பது வருத்தமாக இருக்கிறது.

ஸ்டாலின் எவ்வாறு சாதி வெறி பிடித்தவர் என்று தெரியாதா? பெரம்பலூர் பொது தொகுதி என்பதால் ராசாவை நீலகிரிக்கு அனுப்பியவர். காங்கிரஸில் தலைமையும் இல்லை, தலைவர்களும் இல்லை. அதிமுக ஆட்சியின் போது மத சண்டை, சாதி சண்டை நடந்ததா? அமைதியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் மக்கள், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்திவிட்டது.  

எனவே தமிழகத்தில் மீண்டும் வளமான ஆட்சி அமைய அடித்தளம் விடும் வகையில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு இரட்டை இலையில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார். சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.