
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் சந்தை மதிப்பை விடக் குறைந்த மதிப்பிலேயே விற்பனை செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
இதன் பின் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் அரும்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகள் அடுத்த மாதங்களில் முடிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் வாரியத்திற்குச் சொந்தமான 10 ஆயிரம் வாடகைக் குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளது. இவற்றை புதிதாக கட்டும் போது 30000 வீடுகள் கிடைக்கும். இதில் 15 ஆயிரம் வீடுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விற்பனை செய்யப்படாமல் இருக்கும் 8000 வீடுகளை வாடகை வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்திடம் வீடு வாங்குவது கடினம். மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளைத் தரமாகத்தான் செய்துள்ளார்கள். விலையும் குறைவு. எனவே மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.” எனக் கூறினார்.