it dept raided the house where Thirumavalavan was staying

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் விசிக வேட்பாளருமான தொல். திருமாவளவன் எம்.பி. தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இது குறித்து திருமாவளவன் கூறுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சிதம்பரத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவர் வீட்டில் திருமாவளவன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.