Skip to main content

"தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது!" - ஜி.கே. வாசன் பேட்டி!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

 "It is condemnable!" - GK Vasan interview!

 

கடலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளரிடம் பேசிய வாசன், "ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல  உடனே மீனவர்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை காப்பாற்ற வேண்டும். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் அவர்களுடைய படகுகளையும், வலைகளையும் நாசம் செய்யும் வேலையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது கண்டனத்துக்குரியது. 

 

பெட்ரோல் டீசல் உயர்வைக் குறைக்க மத்திய அரசும் மாநில அரசும் அதனுடைய வரிகளைக் குறைத்தால்தான் பெட்ரோல் விலை என்பது குறையக் கூடும்.

 

கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் வழிகாட்டுதல் இன்றியும், தமிழ்நாட்டினுடைய அனுமதி இன்றியும் தன்னிச்சையாக கர்நாடக மாநிலம் மட்டுமே முடிவெடுத்து அணை கட்டுவது தவறு. தமிழகத்தைப் புறந்தள்ளி தண்ணீர் விடாமல் தடுப்பது, தண்ணீர் தர மறுப்பது, ஒருபோதும் ஏற்புடையது அல்ல. இந்நிலை இன்றும் தொடர்கிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான ஏற்பாட்டினையும் கர்நாடகம் செய்கிறது. தடுப்பணை கட்டினால் நீர்வரத்து குறைந்துவிடும். இதனால் கடலூர், விழுப்புரம், வேலூர் உட்பட 6 மாவட்டங்கள் பாதிக்கப்படும். தமிழ்நாட்டினுடைய நீர்நிலைகள் மீதான உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசும் நீர்நிலை மேலாண்மையை வலியுறுத்த வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.