Advertisment

உள்ளாட்சித் தேர்தல் காரணமா? தாய் கண்முன்னே மகன் வெட்டிப் படுகொலை! 

Is it because of the local elections? Son passes away in front of mother!

Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகள் பரபரப்பாகி கொண்டு இருக்கின்றது. இந்த அரசியல் பரபரப்பில் நெல்லையின் பாளையில் நடந்த அரசியல் படுகொலை மாவட்டத்தின் அரசியல் வட்டாரத்தை உலுக்கியிருக்கிறது.

பாளையின் தெற்கு பஜார் பகுதியை ஒட்டிய 35வது வார்டின் உச்சினிமாகாளி அம்மன் கோவிலைச் சேர்ந்த அபேமணி, தி.மு.க.வின் அந்த வார்டு கழக செ.வாக இருப்பவர். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கட்சியில் பற்றும் பிடிப்பும் கொண்ட அபேமணி அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தாலும், தன்னுடைய ஒர்க்ஷாப்வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைக் கவனிப்பதுடன் வார்டிலுள்ள மக்கள் பணியினையும் மேற்கொண்டவர். அரசு நிவாரணம், மற்றும் அரசு சார்பிலான உதவிகேட்டு அணுகும் அந்த வார்டு மக்களின் தேவைகளை அரசு வரை கொண்டு சென்று நிவாரணங்களைச் செய்து கொடுத்ததால், 35வது வார்டின் மக்களிடையே பிரபலமாக வளர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தி.மு.க.வின் மாநகர மா.செ.வும் பாளை எம்.எல்.ஏ.வுமான அப்துல்வகாப்பின் தரப்பைச் சேர்ந்தவர் என்று பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வார்டு சார்பில் மாநகர கவுன்சிலர் வேட்பாளர் சீட் பெறுவதற்காக முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் அபேமணி. அந்த வார்டில் அவருக்கான அறிமுகத்தை அறிந்த, மா.செ.வும் அவரைக் கவுன்சிலர் பொறுப்பிற்கு சிபாரிசு செய்திருக்கிறார். அதே சமயம் அதே வார்டில் தி.மு.க. சார்பில் வேறு சிலரும் சீட் கேட்டுள்ளனர். ஆனாலும் அந்த வார்டில் மெஜாரிட்டியாக இருக்கிற சமூக மக்களின் பிரிவைச் சார்ந்தவர் அபேமணி என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம் என்ற பேச்சும் ஓடியிருக்கிறது. இந்த நிலையில், வார்டு வேட்பாளர் ஒதுக்கீட்டில் 35வது வார்டு பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், அபே மணி, தன் தாயாரை வேட்பாளராக்குவதில் தீவிரமான போது அதற்கான வாய்ப்பும் கிட்டியிருக்கிறது.

Advertisment

அதையடுத்தே சுறுசுறுப்பாக தேர்தல் வேலையை ஆரம்பித்த அபே மணி, தனது தாயாரை அறிமுகப்படுத்தி ஆரம்பகட்ட அறிமுக வாக்குச்சேகரிப்பை வீடு வீடாக நடத்தியிருக்கிறார். இது ஓரளவு பலனைக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த அபே மணி, ஜன. 29ஆம் தேதி பாளை பஜாரிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பியிருக்கிறார். தெருவின் கோவிலையடுத்த தனது வீட்டின் சமீபமாக அபேமணி வரும்போது அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் ஒன்று அவரது பைக்கில் மோதித்தள்ள நிலைதடுமாறி விழுந்திருக்கிறார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கும்பல் நொடியில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டு வந்த காரிலேயே சிட்டாய்ப் பறந்து தப்பியிருக்கின்றனர். அபே மணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தாய் கதறியபோது, அபே மணியின் உயிர் துடிக்கத்துடிக்க சம்பவ இடத்திலேயே அவர் இறந்திருந்தார்.

தகவல் அறிந்தமாநகர கமிசனரான துரை குமார், மேற்கு மண்டல துணை கமிசனர் சுரேஷ் குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து விசாரணையைத் துரிதப்படுத்தியிருக்கின்றனர். அபேமணியை வெட்டிச் சாய்த்த அந்தக் கும்பல் இரவோடிரவாக, பாளை தாண்டி கொக்கிரகுளம் வழியாக, தென்காசிச் சாலையில் விரைந்ததை வழியோர சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அறிந்த கமிசனரின் தனிப்படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே தி.மு.க.வின் வட்டச் செயலாளர் படுகொலையான தகவல் மின்னல் வேகத்தில் பறந்ததையடுத்து, நெல்லை மாநகர மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான அப்துல்வகாப், எக்ஸ் எம்.எல்.ஏ. எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோர் அபே மணியின் குடும்பத்தார்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தவர்கள், நடந்தவைகளை முதல்வர் வரை கொண்டு செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்த வார்டில் அபேமணி தனது மக்களுக்கு உதவும் நடவடிக்கையால் வளர்ச்சியடைந்திருக்கிறார். தேர்தலில் வாய்ப்பும் தென்பட்டதால், அங்கு தனது தாயை வேட்பாளராக்குவதற்கான முயற்சியிலும் முன்னேறியது எதிரியின் கண்ணை உறுத்தியிருக்கிறது. இதுவும் கொலைக்கு காரணமா, அல்லது டாஸ்மாக் பார் ஏலம் தொடர்பான மோட்டிவ்களா என பல்வேறு வழிகளில் விசாரணையிருக்கிறது.ஆனாலும் இந்த சம்பவத்திற்காக வெளியூரிலிருந்து வாடகைகொலையாளிகள் வரவழைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது என்கின்றனர் தனிப்படையினர்.

Is it because of the local elections? Son passes away in front of mother!

இதுகுறித்து நாம் நெல்லை மாநகர கமிசனரான துரை குமாரிடம் பேசியபோது, “இந்தச் சம்பவத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டதாகத் தெரிகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சிலரைப் பிடித்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணையின் முடிவுக்குப் பிறகுதான் சம்பவத்தின் மோட்டிவ் தெரியவரும்” என்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் ஆரம்பகட்டத்திலேயே நடந்த முதல் அரசியல் படுகொலை அரசியல் வட்டாரத்தை அலர்ட்டில் வைத்திருக்கிறது.

nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe