
இளம்பெண்ணை ஆபாசமாக காணொலி பதிவு செய்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்த சேலம் சிறைக்காவலர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நரியனேரி அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்தவர் அருண் (30). சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் (31). இவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் வார்டன்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், சிறை வார்டன்கள் இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். உதவி ஆணையர் லட்சுமி பிரியா நேரடி விசாரணை நடத்தினார். இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணும், சிறை வார்டன்கள் இருவரும் அறிமுகம் ஆகியுள்ளனர். சமூக ஊடகத்தில் தொடங்கிய அவர்களின் நட்பு ஒரு கட்டத்தில், நேரில் சந்தித்துப் பேசிப்பழகும் அளவுக்கு விரிவடைந்தது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட சிறை வார்டன்கள் இருவரும் இளம்பெண்ணை ஆபாசமாக காணொலி பதிவு செய்ததோடு, அதைக் காட்டி மிரட்டியே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து தொல்லைகள் அதிகரிக்கவே, இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரிய வந்தது.
முழுமையான விசாரணை அறிக்கை சேலம் சிறைத்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, பலாத்கார வழக்கில் சிறை வார்டன்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அரசுப்பணியாளர் நடத்தை விதிகளின் கீழ் வார்டன்கள் அருண், சிவசங்கர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்தியச் சிறை எஸ்பி தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us