ADVERTISEMENT

அசைவ உணவகங்கள் விவகாரம்; ஆளுநருக்கு அமைச்சர் எ.வ. வேலு பதிலடி

11:22 AM Aug 13, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 10 ஆம் தேதி திருவண்ணாமலை வந்தார். இதையடுத்து, அவர் திருவண்ணாமலை கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு, தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக உள்ளே வந்த அவருக்கு கோவிலின் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். கோவிலில் தரிசனம் செய்ய வந்த அவருக்கு, திருக்கோவில் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கிரிவலப் பாதையில் நிருதிலிங்கம் என்ற இடத்திலிருந்து திரு நேர் அண்ணாமலை என்ற இடம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது குடும்பத்துடன் அவரும் கிரிவலம் நடந்து சென்றார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “அருணாச்சலேஸ்வரர் கோவிலின் அருகாமையில் கிரிவலப் பகுதியில், போதிய கழிவறைகள் இல்லாததை அறிந்தும் அசைவ உணவு விற்கும் உணவகங்கள் இருப்பதைப் பார்த்தும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக பக்தர்கள் தங்கள் மன வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்று நான் நம்புகிறேன். அது அவ்வாறே இருக்க வேண்டும். அதே சமயம் அருணாச்சலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஆளுநரின் அறிக்கை குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவிக்கையில், “உணவு என்பது அவரவர் உரிமை, கிரிவலம் வரும் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து அசைவ உணவையும், உணவகங்களையும் தவிர்க்க வேண்டும். அரசு சார்பில் இதற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT