The issue of contempt of the national flag; SV Sekar Petition in the High Court

தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பாஜகநிர்வாகி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் குறித்து தவறான தகவலைத் தெரிவித்தும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி. சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.வி. சேகருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவி சால்வை போர்த்திய செயலைக் களங்கம் எனத் தெரிவித்த முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஏற்றப் போகிறாரா என கேள்வி எழுப்பியதாகவும், தேசியக் கொடியை அவமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், புகார்தாரரை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி எஸ்.வி. சேகர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தார்.