/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_191.jpg)
சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிறகு அரசுத் துறையில் இணைக்கும் அரசாணையை வெளியிடாமல் இருப்பதால் மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசுத்துறையுடன் இணைக்கும் அரசாணையை வெளியிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரங்கதமிழ்ஓளி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன், கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டலச் செயலாளர் ராஜ்குமார், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்தன், நகரத் தலைவர் தில்லை ஆர். மக்கின், சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டுக்குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், சிபிஐ வட்ட செயலாளர் தமிம்முன்அன்சாரி, தவாக நகர செயலாளர் குமரன், மதிமுக நகரச் செயலாளர் குமார், மனிதநேய மக்கள் கட்சி ஷாகுல்அமீது, தமுமுக ஜாவித் பாஷா, முஸ்லிம் லீக் ஷாகுல் அமீது உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தைக் காப்பாற்ற உடனடியாக மருத்துவக் கல்லூரியை அரசுத் துறையுடன் இணைக்கும் அரசாணையை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அதன் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்கோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து தமிழக அரசு மருத்துவத்துறையோடு இணைக்கும் கருத்துரு உருவாக்கப்பட்டது. அதற்கென கையகப்படுத்தப்படும் அரசாணை ‘Take over GO’ வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அரசின் மருத்துவத் துறையோடு ஒருங்கிணைக்கப்படவில்லை. அதாவது மருத்துவத் துறையுடன் இணைப்பதன் மூலம் மருத்துவ காலிப்பணியிடங்களை எளிதாக நிரப்ப முடியும். தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் இடமாறுதலைப்பெற்று ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு வரமுடியும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் பெறுகிற அனைத்து சலுகைகளையும் நமது கல்லூரி மருத்துவமனையும் பெற முடியும்.
ஆனால் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுகிற பல்கலைக்கழக மானிய நிதியிலிருந்து ஒரு பகுதியை பிரித்து ராஜா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கி இந்த நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அரசின் மருத்துவத்துறையோடு ஒருங்கிணைக்கப்படாததால் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 254 மருத்துவர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 98 பேர் மட்டுமே இங்கு பணியாற்றுகிற அவலம் தொடர்கிறது.
இந்த 98 மருத்துவர்களில் டீன் மருத்துவர் மட்டுமே அரசு மருத்துவர். மற்ற மருத்துவர்கள் ரெண்டும் கெட்டான் நிலையில் உள்ளனர். அரசு மருத்துவராகவும் இல்லாமல் பல்கலைக்கழக மருத்துவராகவும் இல்லாமல் பல்கலைக்கழகத்திலிருந்து 3 மாதத்திற்கு ஒரு முறை மானியம் பெற்று அதன்மூலம் சம்பளத்தை வாங்கிக் கொள்ளுகிற திரிசங்கு நிலை. அதுமட்டுமன்றி 98 மருத்துவர்களில் சுமார் 60 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிபவர்கள். இதுதான் நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிலை எனவே உடனடியாக அரசுத் துறையுடன் இணைக்கும் அரசாணையை வெயிட்டால் தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)