Skip to main content

'அந்த மகளிர் சொன்ன ஒரு வார்த்தை போதாதா நமக்கு'-ஈரோட்டில் முதல்வர் பேச்சு 

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
 'Isn't a word said by those women enough for us?'- Erode Chief Minister's Speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ஈரோடு சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பிரச்சார மேடையில் பேசுகையில், ''சட்ட ஒழுங்கு சீர்குலைத்து இருண்ட கால ஆட்சியை கொடுத்தது அதிமுக ஆட்சி. பாரபட்சமின்றி அனைவரும் பொதுவான ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து மக்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் நல்லாட்சி நடத்தி வருகிறோம். நாட்டைக் காக்க ஜனநாயக போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க நான் இங்கு வந்துள்ளேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

இது பரப்புரை கூட்டமாக அல்லது மாநில மாநாடா? என்ற கேட்கும் அளவிற்கு இங்கு திரண்டு வந்திருக்கிறீர்கள். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் நற்சாட்சி பத்திரம் போல் வரவேற்புகளை வழங்கி அலை அலையாய் மாநாட்டிற்கு வருவது போல் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பயன் கிடைக்கிற மாதிரி நல்லாட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம்.

நான் அடிக்கடி தமிழக முழுவதும் திட்டங்களை ஆய்வு செய்வதற்கு பயணிப்பேன். அப்படி சேலத்தில் நடைபெற்ற ஆய்வில் பொதுமக்களை சந்தித்து நம்முடைய அரசு திட்டங்கள் எப்படி செயல்படுகிறது; ஏதாவது குறை இருக்கிறதா; இல்லை திட்டங்களை செழுமைப்படுத்த ஏதாவது கருத்துக்கள் இருக்கிறதா என்று கேட்டேன். அதில் மகளிர் ஒருவர் சொன்ன கருத்து என்னால் மறக்க முடியாது. ரொம்ப எதார்த்தமா சொன்னாங்க.

'ஐயா என்னுடைய கணவர் பெயிண்டர். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. என்னுடைய கணவருக்கு பெயிண்டிங் வேலை தொடர்ந்து இருக்காது. சம்பாதிக்கிற காசு வீட்டு செலவுக்கே சரியா போயிடும். நானும் வீட்டு வேலைக்கு போகிறேன். மூன்றாவது படிக்கிற என்னுடைய குழந்தை காலையில் சாப்பாடு கொடுக்க முடியவில்லை. வேலை செய்யும் போது இதையே நினைத்து கஷ்டப்பட்டு கொண்டு இருப்பேன். இப்போ அந்த கஷ்டம் இல்லை. நீங்கள் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தால் காலையில் என் குழந்தை பள்ளிக்கு போய் நல்லா சுவையாக சாப்பிடுகிறார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பெரிய உதவி. எங்க செலவு போக மீதியை பெண் குழந்தை பேரில் பக்கத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் தொடங்கி சேமிக்க தொடங்கி விட்டேன். மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது வெறும் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். ஆனால் என் குழந்தையின் எதிர்காலத்திற்கான பணம். என் குழந்தைக்கு சாப்பாடு போட்டு பணமும் கொடுக்கின்ற நீங்கள் நல்லா இருக்கணும்' என்று அந்த தாய்மார் சொன்னார். இது போதாதா நமக்கு இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்'' என பேசினார்.

சார்ந்த செய்திகள்