
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது இரவு 11 மணிக்கு மேல் பள்ளிவாசல் பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் ஆட்டோவிலும் இருசக்கர வாகனத்திலும் அமர்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரமேஷ், அவர்களை முகக்கவசம் அணியவும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் எச்சரித்து அனைவரையும் தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல வலியுறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர்களில் ஐந்து பேர் காவலரைக் கீழே தள்ளியதோடு, அவரை அடிக்காத குறையாக அங்கிருந்து துரத்தி, உள்ளே வரக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையம் வழக்குப் பதிவுசெய்து 5 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய காஜா என்ற இளைஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், அரசின் நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் காவல்துறையினர் எடுத்துக் கூறுவது அவர்களின் கடமை. எனவே அபாயகரமான இந்தச் சூழலில் முகக் கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தவர்களைக் காவல்துறை வலியுறுத்தியது தவறான காரியமல்ல. மேலும், காவல்துறையினர் மன உளைச்சலில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது தொடர்ந்து அவர்களை எதிரிகளாக பாவிக்கும் மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
காவல்துறையினர் தன்னுடைய கடமையை செய்யும்போது அவர்கள் அச்சுறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கண்டிப்போடு காஜா என்ற மனுதாரருக்கு அறிவுரை கூறினார். மேலும், தீர்ப்பளித்த நீதிபதி, நீதிமன்றம் முன்பு காவலரிடம் மனுதாரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மனுதாரர் மதுரை வழக்கறிஞர்கள் எழுத்தர் கூட்டமைப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், வருகிற 14ஆம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைப்பதாகவும் அதுவரை காவல்துறையினர் மனுதாரரை கைது செய்ய தடையும் விதித்தார்.