
தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் பாசனம் செய்யும் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத் தேர்தல் நடந்து வருகிறது. ஏராளமான இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. இதுவரை அரசியல் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சி வேட்பாளர், எதிர்க்கட்சி வேட்பாளர் என அரசியல் கட்சி கரைகளோடு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சில இடங்களில் ஒரே கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஏற்பட்டு இரு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ததோடு உள்ளாட்சித் தேர்தல் போல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்த வேட்பாளர்கள் பல இடங்களில் வாக்குகள் பெற வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை பணமும் கொடுத்துள்ளனர்.

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி கிராமத்தில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் வாக்குப் பதிவு தொடங்கும் போது போலி வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்கள் அதனால் பட்டா சிட்டா கொண்டு வரவேண்டும் என்று திமுக தரப்பும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை அடையாள அட்டைகளை சரி பார்த்து அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பினரும் சொல்ல சலசலப்பு ஏற்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சுமார் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் 104 வயது மூதாட்டியும் வந்து வாக்களித்தார். கறம்பக்குடியில் நாற்காலி வண்டியில் வந்த முதியவர் நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும் என வாக்களித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் போல நீர்ப்பாசனத் தலைவர் தேர்தல் நடப்பதை வியப்பாக பார்த்தனர் பொதுமக்கள்.