Skip to main content

தண்ணீர் இருந்தும் கருகவிட்ட பொறுப்பற்ற அதிமுக அரசு! - புலம்பும் விவசாயிகள்!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
farmers


நாகை மாவட்டம் முழுவதும் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள், இளம்பருவத்திலேயே கருகிவருவதை கண்டு விவசாயிகள் வேதனையடைகின்றனர். நீரின்றி கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல் மனமுடைந்த விவசாயிகள், கால்நடைகளுக்கு உணவாகவாவது ஆகட்டுமே என்று ஆடு, மாடுகளை விட்டு மேயவிட்டுள்ளனர்.

வழக்கமா திறக்கவேண்டிய தேதியில் இருந்து தாமதமாக திறந்தாலும், இந்த ஆண்டு தாமதமின்றி தண்ணீர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு, மேட்டூர் அணை திறக்கப்பட்டதும், சம்பா சாகுபடியை, கடைமடை விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் துவங்கினர்.
 

farmers


வரலாறு காணாத தென்மேற்கு பருவ மழையினால், மேட்டூர் அணை மூன்று முறை முழு கொள்ளளவை தாண்டியது. இருந்தும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் சரிவர தூர்வாராமல் போனதாலும், திருச்சி முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணத்தினாலும், கடைமடை பகுதியான நாகைக்கு காவிரி நீர் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் வந்ததே தவிர, பாசனத்திற்கு எட்டவில்லை.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி, அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் சொந்த தொகுதியும், கிராமமுமான, கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளுர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பு செய்திருந்தனர். முளைவிட்டிருந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் முழுவதும் கருகி்கொண்டிருக்கிறது. மேலும் ஆழியூர், பெருங்கடம்பநூர் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் சரகுபோல் கருகிவிட்டன. ஆழியூர் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் கருகும் பயிரை காப்பாற்ற முடியாமல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகவாவது ஆகட்டுமே என்று, வயலில் கால்நடைகளை மேயவிட்டுள்ளனர்.
 

farmers


இது குறித்து பாலையூர் விவசாயி தமிழ்செல்வன், "கீழையூர், ஈசனூர், வெண்மணச்சேரி ஆகிய இடங்களில் விதைத்து, 25 நாட்களான நாற்றுகளுக்கு களைக்கொல்லி மருந்துகளைக்கூட தெளித்துவிட்டோம். ஆனால், களைக்கொல்லி தெளித்து 5 நாட்களுக்குள் பயிர்களுக்கு தண்ணீர் விட வேண்டும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்காமல் போனதால் பயிர்கள் முழுவதும் கருகிவிட்டது."

ஆழியூர் விவசாயி சேகர் கூறுகையில், "பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் குளங்களில் தேங்கிய தண்ணீரை ஆயில் இன்ஜின் மூலமாகவும், இறவைக்கூடை மூலமாகவும் இறைத்து சில விவசாயிகள் பயிரை காப்பாற்றி வந்தாலும், மேடான பகுதிகளில், வயல்கள் பாலம்பாலமாக வெடித்து காணப்படுவதால், பயிர்கள் கருகி விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர். பொதுப்பணித்துறையின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளில் ஏற்பட்ட ஊழல்களும், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததுமே இந்த நிலைக்கு காரணம்". என்றார்.
 

farmers


விவசாயி வெங்கடேஷ், "காவிரி நீர் வந்துசேராத காரணத்தால், கடைமடையில் சம்பா பயிர்கள் கருகிவரும் நிலையில் மீதமுள்ள பயிர்களையாவது, காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லை என்றால், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு, மறுபடியும், சாகுபடி செய்ய அரசு சார்பில் விதை மற்றும் உரத்தினை நூறுசதவிகித மானியத்தில் வழங்க முன்வரவேண்டும்". என்கிறார்.

"ஆறு ஆண்டுகளாக விவசாயத்தை இழந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு , இந்த ஆண்டு போதுமான அளவு தண்ணீர் இருந்தநிலையில் திரன் இல்லாத நிர்வாகத்தால் நூரு டி,எம்,சி க்கும் அதிகமான தண்ணீரை கடலுக்கு காவல் நின்று அனுப்பிவிட்டனர். தண்ணீர் இருந்தும் இந்த ஆண்டு விவசாயம் கருகிவருகிறது". என்கிறார்கள் சக விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்