irattaimalai Srinivasan birthday Courtesy on behalf of Tamil Nadu Govt

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளான இன்று (07.07.2024) தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அவரது சிலைக்கும், உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கோழியாளம் கிராமத்தில் இரட்டை மலை ஆதியம்மாள் தம்பதியினருக்கு 07.07.1859 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். அவர் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சாதிக் கொடுமைகள் பற்றி அறிந்து அவற்றை அகற்றுவதற்கு உறுதியெடுத்துக் கொண்டார். அதற்காக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆதிதிராவிடர் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். மக்களை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தன் ஆயுள் முழுவதும் நாட்டு மக்களுக்காக பாடுபட்டார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 15.08.2000 அன்று திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு அஞ்சல் தலையினை வெளியிட்டு சிறப்பித்தார்.

Advertisment

irattaimalai Srinivasan birthday Courtesy on behalf of Tamil Nadu Govt

இரட்டை மலை சீனிவாசனின் தொண்டுகளையும், தியாகங்களையும் போற்றி அவருக்கு 21 இலட்சம் ரூபாய் செலவில் கிண்டி, காந்திமண்டபம் வளாகத்தில் நினைவகத்தை உருவாக்கி முழு உருவச்சிலை அமைத்து, இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 07.07.2009 அன்று திறந்துவைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் ரூபாய் 2 கோடியே 18 இலட்சம் மதிப்பீட்டில் திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 27.2.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7 ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் சிறப்பான முறையில் கொண்டாட உத்திரவிட்டார். அதன்படி இன்று (07.07.2024) கிண்டி காந்திமண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கும். திருவுருவப்படத்திற்கும் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன், இரட்டைமலை சீனிவாசனின் கொள்ளு பெயர்த்தி நிர்மலா அருள் பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

அதே போன்று, செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தேன்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.