ADVERTISEMENT

இறையூர் வேங்கை வயல் சம்பவம்; 7 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை

10:02 AM Jan 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உடனே நேரில் ஆய்வு செய்து குடிநீரில் மலம் கலந்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கே திரண்டனர். அடுத்தடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உட்பட அதிகாரிகள் விசாரணை செய்து 11 பேர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தனர்.

அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பட்டியலின மக்களிடம் பேசிய பிறகு மாற்றுக் குடிநீர்த் தொட்டி, தண்ணீர் குழாய்கள் அமைக்கப்படும் என்றார். உடனடியாக தண்ணீர் குழாய் அமைத்து மற்றொரு தண்ணீர் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் மற்றும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு கடந்த 6ந் தேதி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் முதலில் கிராமத்திற்குச் சென்று நேரில் விசாரணை செய்த பிறகு முதற்கட்டமாக 7 பேருக்கு சம்மன் அனுப்பி வெள்ளனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர். ஐந்து மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 70 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இன்னும் சிலருக்கு சம்மன் தயாராக உள்ளது. மேலும் சம்பவம் நடந்த நாளில் ஊரிலிருந்து தற்போது வெளியூர் சென்றுள்ள நபர்களுக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்ப விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

15 நாட்கள் கடந்தும் குடி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் பொதுமக்களிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் உள்ளது. விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என்கிறார்கள் போலீசார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT