Skip to main content

சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது: தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வேண்டுகோள்

Published on 04/04/2018 | Edited on 04/04/2018


சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு 10.04.2018 தேதியைத் தேர்வு செய்திருந்தால், தயைகூர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, அதனை வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஆவன செய்ய வேண்டுமென்று போராட்ட களத்தில் பங்கேற்றுள்ள தமிழக மக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்பு குழு, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்அ என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 
 

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்பு குழு, மற்றும் அனைத்து விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோள்.
 

வாழ்க்கை இனிமையானது, மகிழ்ச்சிக்குரியது, அதனாலேயே அது மேன்மையானது.
 

வாழ்க்கையின் மேன்மை கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றால்தான் வெளிப்படுகிறது.


இதில் கலையும் இலக்கியமும் மனித உள்ளத்திற்கானவை; ஆனால் விளையாட்டு உடல், உள்ளம் இரண்டுக்குமே நலம் சேர்ப்பது.
 

அதேநேரம் இம்மூன்றுக்குமே முன்நிபந்தனை பொருளியல் வாழ்வு!
 

பொருளியல் வாழ்வென்பது உண்ண உணவு, குடிக்க தண்ணீர், உறங்க ஓய்ந்திருக்க வீடு மனிதனுக்கு இருப்பதாகும்.
 

இந்த அடிப்படை தேவைகள் பறிக்கப்படும், அழிக்கப்படும் நிலையே உருவாக்கப்படுகிறது தமிழ்நிலத்தில்.

 

ipl


 

கூடங்குளத்தில் அணுவுலைப் பூங்கா, தேனி அம்மரப்பர் மலையில் நியூட்ரினோ மய்யம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர், காவிரிப் படுகை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம், மீத்தேன், ஷேல், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், ஓஎன்ஜிசி கிணறுகள், குழாய்கள், மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாகர் மாலா திட்டங்கள், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மேற்கு மாவட்ட விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு.
 

ஒருசேர இத்தனை திணிப்புகளும் தமிழ்மண்ணில்!
 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரினால், பாலைவனமாக்குவதற்கான பேரழிவுத் திட்டங்களாகப் பார்த்து கொட்டிக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு.
 

ஒரே போடாக தமிழகத்தின் தலையில் கல்லைப் போடும் நோக்கில், காவிரியை இங்கு வரவிடாமல் கர்நாடகத்துக்குள்ளேயே முடக்கிவிடவும் பார்க்கிறது மோடி அரசு.
 

அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலேயே நான்கு ஆண்டுகளைக் கடத்தி, இப்போது தான் விரும்பியபடி சட்டத்திற்குப் புறம்பான ஓரம்சாய்ந்த ஓர் தீர்ப்பைத் தயாரித்து மேலாண்மை வாரியத்தையே காலி செய்திருக்கிறார்.
 

இப்படி திட்டமிட்டுத் தண்ணீரைத் தடுத்து மண்ணை மலடாகச் செய்து மக்களின் வாழ்வுரிமையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறார் மோடி.
 

அதனால் தமிழகமெங்கும் போராட்டங்கள்!
 

தன்னெழுச்சியான, தங்கள் சந்ததியின் எதிர்காலத்திற்கான இந்தப் போராட்டக் களத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், வணிகர்கள், மாணவர்கள், இளையோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள்!
 

இவர்களோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழிய, பெரியாரிய, சிறுபான்மையர், மகளிர், மாணவர் தோழமை அமைப்புகள், இயக்கங்கள்!
 

அதேநேரம் இந்தப் போராட்டங்களை மடைமாற்றவும் மழுங்கடிக்கவும் தனக்கே உரிய தந்திரோபாயங்களைக் கையாளுகிறது மோடி அரசு.
 

அந்த தந்திரோபாயங்களில் இந்திய கிரிக்கெட் வாரியமும் சிக்கிவிடக்கூடும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியல்லை.
 

ஆம், வரும் 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது என்ற தகவல்தான் இந்த சந்தேகத்திற்கான அறிகுறி.
 

இன்றைய காலத்தில் ஒப்பீட்டளவில் சினிமாவும் கிரிக்கெட்டும்தான் ஆற்றல்மிகு ஊடகங்களாக உள்ளன.
 

அதிலும் கிரிக்கெட் பேராற்றலுடையது!
 

அப்படியிருக்க, ஆட்சியாளர்கள் போராட்டங்களின்பால் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பேராற்றலுடைய கிரிக்கெட் ஊடகத்தினைப் பயன்படுத்திக்கொள்ளாமல் எப்படி?
 

எனவேதான் அத்தகைய சூழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும் இரையாகிவிடக் கூடாது என்று எண்ணுகிறோம்.

 

velmurugan


 

ஆகையால் வரும் 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இல்லை என்கிறபடிதான் தங்களின் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்படும் என்று நம்புகிறோம்.
 

தப்பித் தவறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு 10.04.2018 தேதியைத் தேர்வு செய்திருந்தால், தயைகூர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, அதனை வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஆவன செய்ய வேண்டுமென்று போராட்ட களத்தில் பங்கேற்றுள்ள தமிழக மக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்பு குழு, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
 

அதுவே தங்கள் வாழ்வுரிமைக்காகவும் எதிர்கால தங்கள் சந்ததிகளின் நலனுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யும் கைமாறாக இருக்கும்.
 

அதேநேரம் நாங்கள் கிரிக்கெட்டுக்கோ இந்திய கிரிக்கெட் வாரியத்துகோ, கிரிக்கெட் ரசிகர்களுக்கோ, ஒருபோதும் எதிரானவர்கள் இல்லை என்பதை உள்ளன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 

குறிப்பு - கிரிக்கெட் வாரியத்தால் எங்கள் நிமாயமான கோரிக்கை புறந்தள்ளப்பட்டால், கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் இந்த கிரிக்கெட்  போட்டியை முற்றாக புறக்கனித்து மைதானத்தின் இருக்கைகள் முழுவதும் வெறிச்சோடியிருக்க செய்ய வேண்டுமென்று, போராடும் விவசாய மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்