மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, லட்சக் கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க சார்பில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, “இந்தச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பண்ணை ஒப்பந்தம் என்பது, விவசாயிகளை அடிமையாக்கப் போகிறதே தவிர, அவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யாது. இது, விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய மோசமான சட்டம். அதனால்தான், இந்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி வருகிறோம்.
விவசாயிகளுக்காக கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட , 'உழவர் சந்தை' முக்கால்வாசியை இந்த எடப்பாடி அரசு மூடிவிட்டது. இதனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை, விலை நிர்ணையம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அதுபோல், இந்த எடப்பாடி அரசு கூடிய விரைவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தையும் தனியார் மயமாக்கப்போகிறது. இப்படி மத்திய மாநில அரசுகள், மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட அரசை மாற்ற வேண்டும். அது 2021ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அமையும். அதன் மூலம் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவார்” என்று கூறினார்.