Investment of Rs. 900 crore attracted on first day says chief Minister Stalin

Advertisment

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும் என்று பேசியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில் பல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சான்பிரான்சிஸ்கோவில் ஒரே நாளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலீடுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் ஒரே நாளில் ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இது சென்னை, மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்கும். இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் முதலீட்டை ஈர்க்கும் வேகம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அமெரிக்காவில் இருந்து மேலும் அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்படும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.