Skip to main content

விசாரணை அதிகாரி மாற்றம்: முருகன் சிலை மோசடி குற்றவாளிகளை காப்பாற்ற சதியா? அன்புமணி இராமதாஸ் கேள்வி

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

விசாரணை அதிகாரி மாற்றம் முருகன் சிலை மோசடி குற்றவாளிகளை காப்பாற்ற சதியா? என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பழனி முருகன் கோவிலுக்கு ஐம்பொன் சிலை செய்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது குறித்த வழக்கின் விசாரணை அதிகாரி கருணாகரன் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முருகன் சிலை மோசடி வழக்கின் விசாரணை 20 நாட்களில் முடிவடையவிருந்த நிலையில், விசாரணை அதிகாரி மாற்றப்பட்டிருப்பது  இவ்விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த ஐயத்தை அதிகரித்துள்ளது.

 

 

 

காவல்துறைத் தலைவர் பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில் தமிழகத்தில் நடைபெற்ற சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகள் குறித்த உண்மைகள்  அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. பழனிமலை முருகனுக்கு ஐம்பொன்னில் சிலை செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்ததை இந்தப் பிரிவு தான் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கருணாகரன், இவ்வழக்கு  குறித்த முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றியிருப்பதாக கூறப்படும் நிலையில் தான் கடந்த 29.06.2018 அன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் கோவை மாவட்ட மின்திருட்டுத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பழனி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வெங்கட்ராமன்  முருகன் சிலை மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது இயல்பாக நடந்த மாற்றமாக தெரியவில்லை.
 

பழனி மலை முருகன் சிலை மோசடி தனித்த நிகழ்வாகத் தோன்றவில்லை. மாறாக அதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளது. பழனி முருகன் கோவிலில் ஒன்பது மூலிகைகளால் உருவாக்கப்பட்ட  நவபாஷான முருகன் மூலவர் சிலை இருக்கும் நிலையில் புதிதாக ஐம்பொன் சிலை செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால், மூலவர் சிலையை மறைக்கும் வகையில் ஐம்பொன் சிலையை அமைத்தால், மறைவாக உள்ள நவபாஷான சிலையை பயன்பாட்டிலிருந்து அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடத்தி விடலாம் என்ற சதித்திட்டத்தின் அங்கமாகத் தான் புதிய சிலை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐம்பொன் சிலை செய்வதிலேயே மோசடி நடந்து, அந்த சிலை கறுத்து விட்டதால் ஒரு கட்டத்தில் அதை அகற்\ற வேண்டியதாகிவிட்டது. அதனால் தான் நவபாஷான சிலை கடத்தலிலிருந்து தப்பியது.

 

 Investigative Officer Change: Murugan statue is a conspiracy to save fraudulent culprits?


 

இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கருணாகரன், அவர்களை கைது செய்ய ஆயத்தமான நிலையில் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, முருகன் கோவிலின் முன்னாள் இணை ஆணையரும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினருமான கே.கே. ராஜா, முன்னாள் அதிகாரிகள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோர் ஏற்கனவே கைதாகியுள்ள நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தான், அதைத் தடுக்கும் வகையில் விசாரணை அதிகாரி கருணாகரண் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

 

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக கடந்த 27.06.2018 அன்று உயர்நீதிமன்றத்தில் நேர் நின்ற பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணையில் தமக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தமக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் தெரியாமலேயே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாற்றியிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி,‘‘ உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டால் காவல்துறை தலைமை இயக்குனரை நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதை சிறிதும் மதிக்காமல், அடுத்த இரண்டாவது நாளே, முக்கிய விசாரணை அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ முக்கியத் தலைவரை காப்பாற்ற சதி நடப்பதாகத் தான் பொருள் ஆகும். இதை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.
 

தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகத் தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்டு வரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் அதன் தலைவருக்கே தெரியாமல்  இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் அரசின் செயல்பாடுகள்  உள்ளன.

 

 

 

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆலயங்களும், அவற்றில் உள்ள கடவுள் சிலைகளும் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். அதற்கு எதிரான வகையில் செயல்பட்டு சிலைக் கடத்தல் மற்றும் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் ஆகும். அதற்கு மாறாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டால் மக்கள் கடுமையாக தண்டிப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.