திமுக எம்.பி. கதிர் ஆனந்த்திற்குச் சொந்தமான வீடு மற்றும் கல்லூரியில் கடந்த 3ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதாவது காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்த்தின் வீடு, பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்கள் என ஆறு இடங்களில் சோதனையானது நடைபெற்றது.

Advertisment

இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொறியியல் கல்லூரியில் இருந்து 13 கோடியே 20 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது. அதேபோல் காட்பாடியில் இருக்கக்கூடிய கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரிலிருந்து 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 50க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் அமலாக்கத்துறையில் அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் இன்று (22.01.2025) காலை ஆஜரானார்.

Advertisment

இந்நிலையில் கதிர் ஆனந்த்திடம் 10 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது. அதன் பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், “2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர். அதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.