Advertisment

நிர்மலாதேவி வழக்கை நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்புடன் விசாரிக்க வேண்டும் -மாதர் சங்கம் போர்க்கொடி

நிர்மலாதேவி வழக்கை நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும் என்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலண்டினா சேலத்தில் செய்தியாளர்களிடம் இன்று (மே 9, 2018) கூறியது:

Advertisment

nirmala devi

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரே சம்பந்தப்பட்டு இருப்பதால், ஒரு நபர் கமிஷனை அமைக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. இப்போது நடக்கும் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. சிபிசிஐடி காவல்துறையினரால் ஆளுநரிடம் நேரடியாக விசாரிக்கும் அதிகாரம் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறோம். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜகவின் குரலை ஒலிக்கும் நபராக இருக்கிறார். நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் உள்பட பல உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால்தான் வெளியில் சீக்கிரம் சொல்வதில்லை. நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் கூடிய உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தடவிப்பார்க்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர், பெண் நிருபரை, 'ஆழகாக இருக்கிறாய்' என்கிறார். ஆளுநர் முதல் அமைச்சர்கள் வரை பெண்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொள்கின்றனர் எனும்போது இந்த மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறிதான்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அமைப்பே சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. கோகுல்ராஜ் படுகொலையை மறைக்க வேண்டும் என்பதற்காகவும், விஷ்ணுபிரியா தாழ்த்தப்பட்டவர் என்பதாலும் அதிகாரிகளின் நெருக்குதல் காரணமாகத்தான் அவர் இறந்திருக்க வேண்டும்.

நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய பெரிய அதிகாரிகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் எல்லாம் மாட்டியிருப்பதுபோல் டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கிலும் பெரிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால்கூட பின்வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. விஷ்ணுபிரியா வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

காவல்துறையினர் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல்தான் செயல்படுகின்றனர். புதிய சட்டங்கள் பற்றிய பயிற்சியும், விழிப்புணர்வும் காவல்துறையிடம் இல்லை. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கத்தான் காக்கி சீருடை அணிந்திருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு வேண்டும்.

சேலம் மாநகர காவல்துறையினரின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. இங்குள்ள டாக்டர் ராஹிலா பேகம் என்பவர், கணவரால் தாக்கப்பட்டு, புகார் அளித்திருக்கிறார். அவருடைய புகாரின்பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், மேல் நடவடிக்கை எதுவும் இன்றுவரை எடுக்கப்படவில்லை. ஒரு டாக்டருக்கே இந்த நிலைமை என்றால் பாதிக்கப்பட்ட சராசரி பெண்களை காவல்துறையினர் எப்படி அலைக்கழிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

சேலம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஓமலூர் பகுதியில் மட்டும் 15 நாள்களில் 3 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். போக்சோ சட்டத்தில்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், அந்த சட்டம் குறித்து இன்னும் காவல்துறையினருக்கு போதிய பயிற்சியும், விழிப்புணர்வும் இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பும், நிவாரணமும் அரசு வழங்க வேண்டும் இவ்வாறு வேலண்டினா கூறினார்.

அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரி, ஞானசவுந்தரி, ஜெயலட்சுமி, ராஜாத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

governor Madurai university Nirmala Devi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe