Skip to main content

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Introducing a new program called Mother of the Chief Minister

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “2 ஆயிரம் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ. 356 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் 2.2% மக்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னைக் கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் புதிய குடியிருப்புகள், திறன்மிகு பள்ளிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும், ஏரிகள் சீரமைக்கப்படும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ. 5 கோடி ஒதுக்கீடு. அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ. 430 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நாமக்கல்லில் ரூ. 358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ. 3050 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Tamil Nadu government case against central government

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. இதனையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil Nadu government case against central government

அப்போது அவர் பேசுகையில், “இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Tamil Nadu government case against central government

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமனன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

அமலாக்கத்துறை சம்மன்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Enforcement Department Summons; Supreme Court action order

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்ககளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழஙக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.