
பெண்ணிடம் மாமூல் கேட்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் டாஸ்மாக் மதுக்களை வாங்கிவந்து வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகேஸ்வரியின் வீட்டிற்கு வந்த ராகுல், ராஜி என்ற இரண்டு இளைஞர்கள் வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். கணவரை இழந்து மகனுடன் வசித்துவந்த மகேஸ்வரி இளைஞர்களின் மிரட்டல் குறித்து புகார் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ராகுல், ராஜி என்ற இரண்டு இளைஞர்கள் மிரட்டும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த மகேஸ்வரி, இதுதொடர்பாக வீரகனூர் காவல்நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.
அந்த வீடியோவில் இளைஞர்கள் இருவர் வீட்டின் முன்புற மேற்கூரை, கதவுகள் உள்ளிட்டவற்றை எட்டி உதைத்து கொண்டே மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் தேடிவந்த நிலையில் ராகுல் என்பவரை தலைமைக்காவலர் சத்தியமூர்த்தி கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட ராகுல் மருத்துவ பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பணியில் அலட்சியமாக இருந்த தலைமைக்காவலர் சத்தியமூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளார். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு இரண்டு இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.