Intimidation of Village Administrative Officer; Three arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள மறவாநத்தம் கிராமத்தில் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஏரியில் திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், கிராம உதவியாளர்கள் ராணி, செல்லம்மாள் ஆகியோருடன் மண் கடத்தலில் ஈடுபட்டவர்களைத்தடுத்து நிறுத்துவதற்காகப் பாண்டியன் குப்பம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டரை வழிமறித்தனர். அரசு உத்தரவு இல்லாமல் எப்படி மண் எடுக்கலாம் என்று கேட்டுள்ளனர். அப்போது டிராக்டர் உரிமையாளர் வெங்கடேசன், சாலை விரிவாக்கப் பணிக்காக மண் அள்ளிச் செல்வதாகக் கூறியுள்ளார். அப்படியானால் அதற்கு அதிகாரிகள் அனுமதி சீட்டு வழங்கி இருப்பார்கள். அந்த அனுமதி சீட்டை காட்டுங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது வெங்கடேசனின் ஆதரவாளர்கள் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், ராமர் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Advertisment

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சின்னசேலம் போலீசார், வெங்கடேசன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து அதில் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.