
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நக்கீரன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மயில்சாமி நக்கீரன் யூடியூப் சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் கொரோனா அச்சங்கள் இருந்த காலத்தில் நாம் அவரை சந்தித்த பொழுது மிக உற்சாகமாகவே பேசினார்.
அதில், “கொரோனா உலகத்தை ஆட்டிப்படைக்கிறது. இம்மாதிரியான பேட்டிகள் எடுப்பதே பெரிய விஷயம். நான் வீட்டை விட்டு வெளியில் வந்தே வெகுநாட்கள் ஆகிவிட்டது. சிவசங்கர் பாபா செய்தி வெளியானதும் மயில்சாமி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாரே அந்த நபர் தான் என மீண்டும் அதைப் பற்றி பேசுகிறார்கள். சாதனை செய்தவர்கள் மீண்டும் வேறு சாதனைகளை செய்து பழையதை உடைப்பார்களே. அது மாதிரிதான் இதுவும்.
நான் பேசும் விஷயங்கள் பெரும்பாலும் மக்கள் சார்ந்துதான் இருக்கும். இன்னொரு தனிப்பட்ட நபரின் விஷயங்களைக் குறித்து நான் பேச மாட்டேன். அது நமக்கு தேவை இல்லாத விஷயம். அனைத்திற்கும் இருபக்கங்கள் உண்டு. அதேபோல் தான் சாமியார்களும். நல்லவர்கள், கெட்டவர்கள் உள்ளார்கள். சில சாமியார்களை எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் அடுத்தவேளை உணவை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். மாற்றுத்துணி இருக்காது. அவர்கள்தான் சாமியார்.
ஆசைப்படாமல் இருப்பவர் மட்டுமே சாமியார். ஆடம்பரமாக இருப்பவர்கள் நகைகளைப் போட்டு இருப்பவர்கள், ஆசிரமங்கள் என்னும் பெயரில் கேட்டை அடைத்து உள்ளே பெண்களை வைத்து தவறு செய்பவர்கள் சாமியார்கள் இல்லை. அவர்கள் மேலும் மேலும் முன்னேறுவது இந்த ஜனங்களின் காரணத்தால் தான். அவர்கள் ஏன் செல்கிறார்கள்.
திருவண்ணாமலை போகிறீர்கள். நீங்கள் எப்படி என, என்னை சிலர் கேட்கிறார்கள். நான் சாமியார் அல்ல. நான் இறைவனை கும்பிடுகிறவன். இறைவன் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? என் மனசாட்சி. அதை நான் சொல்கிறேன்” என்றார்.