
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பிற்பகல் 3:30 மணிக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்தியன் வங்கி தங்க நகை மதிப்பீட்டாளர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம் பொன்முடியின் மகனும் எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களிலிருந்து கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடப்பதாகத்தகவல் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)