
அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறைச் சார்பில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதில் ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் சர்வதேச பயிலரங்கம் நடைபெற்றது.
வேளாண் பொருளாதாரத் துறைத் தலைவர் இராமநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேளாண் புல முதல்வர் சுந்தரவரதராஜன் கலந்துகொண்டு பேசுகையில், “உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நமது நாட்டில் வெற்றி பெற இது போன்ற சர்வதேச அளவிலான பயிலரங்குகள் தேவை” என்று பேசினார். மேலும், தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள் அவற்றின் எதிர்காலநிலை பற்றியும், நிதி ஆதாரம் செயலாக்கம் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
பயிலரங்கத்தில் அமெரிக்காவின் பன்னாட்டு உணவுத் திட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் திறன் ஊக்குவிப்பு திட்டத் தலைவர் சந்திரபாபு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக முன்னாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் வடிவேல், காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் புல முதல்வர் புஷ்பராஜ், மதுரை வேளாண் வணிக வளர்ச்சி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சிவக்குமார், தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் பொருளாதாரத் துறை தலைவர் ஜெகன்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இப்பயிலரங்கத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முனைவர்கள் பொன்னரசி, செல்வகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.