Skip to main content

நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள்... துணைபோகும் அதிகாரிகள்!

கரோனா தொற்றால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளநிலையில், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு அல்லாடும் மக்கள் ஒருபுறம் இருக்க, விவசாயத்தில் விளைந்த பொருட்களை விற்பதற்கு விவசாயிகள் படும்பாடு சொல்லில் அடங்காது.


கரோனா பாதிப்புகள் முடிந்தாலும் அடுத்து உணவு தட்டுபாடு, பஞ்சம், பசி போன்ற உணவு பொருட்கள் பற்றாக்குறை, கடுமையான விலையேற்றம் போன்ற சவால்களும் நமக்காக காத்திருக்கிறது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு பெருமுதலாளிகளின் முதலீடுகளுடன், கைகூலியாக பல இடைத்தரகர்கள் விவசாயிகளின் உழைப்பை மலிவாக சுரண்ட களத்தில் குதித்துள்ளனர்.

 

 Intermediaries in Paddy Purchasing ...


தென்மாநில மக்களின் பிரதான உணவான அரிசி தேவையை பதுக்கும் நோக்கில், அதிகாரிகளின் துணையுடன் நெல் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல் கொள்முதல் செய்து, பதுக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி அரிதாஸ் "புரோக்கர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை காப்பாற்றவே, கடந்த ஆண்டு முதல் அரசே நேரடி கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டுவரை நல்லமுறையில் செயல்பட்டு வந்த அரசு நெல் கொள்முதல் இந்த முறை கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தேவையை பயன்படுத்தி, விவசாயிகளின் வயிற்றில் அடித்து நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்க புரோக்கர்கள், அதிகாரிகளின் துணையுடன் செயல்பட்டுவருகிறார்கள்.
 

 nakkheeran appஇவரைத் தொடர்ந்து விவசாயி நந்தகோபால் "எங்கள் கிராமத்தில் சுமார் இருநூறு ஏக்கர் ஏரிநீர் பாசனத்தை ஆதாரமாக கொண்டு இரண்டு போகம் நெல் சாகுபடி நடக்கும், மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்த்தால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி ஆகும். நெல்கொள்முதலை கடந்த பத்து ஆண்டுகளாக அரசு இங்கு நடத்திவந்தது. சுமார் இருபதாயிரம் மூட்டை நெல் அரசு கொள்முதல் செய்யும். அதேபோல இந்த முறையும் நெல் அறுவடைக்கு தயார் ஆனநிலையில் வழக்கம் போல மாவட்ட ஆட்சியரிடம் கொள்முதல் செய்ய மனுகொடுக்க சென்றபோது, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை வேலை உள்ளதால் மாவட்ட ஆட்சியர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

 

 Intermediaries in Paddy Purchasing ...


நீண்ட போராட்டத்திற்கு பின் எங்களை சந்தித்த, நெல் கொள்முதல் மண்டல மேலாளர் செந்தில், இந்தமுறை நெல் கொள்முதல் எல்லாம் கிடையாது. இந்த வருடம் டார்கெட்டெல்லாம் முடிந்துவிட்டது என்றும், இப்போ அதற்கெல்லாம் நேரமில்லை என்றார். இதே மாவட்டத்தில் மற்ற இடத்தில் எல்லாம் வழக்கம்போல நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்று கேட்டதற்கு, தேவையென்றால் நெல் மூட்டைகளை அந்த மையத்திற்கு கொண்டுவந்தால் வேண்டுமென்றால் பார்க்கலாம் என்று எங்களை புறக்கணித்தார். 

அவர் கூறுவது போல இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்முதல் மையத்துக்கு நெல் மூட்டைகளை எடுத்து செல்லும் செலவு கூடுதலாக ஆகும். மேலும் அந்த ஊரில் நெல் மூட்டைகள் நாள் ஒன்றுக்கு 250 முதல் 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கொள்முதல் செய்தால் அவர்கள் மூட்டையை கொள்முதல் செய்யவே இருபது நாட்களுக்கு மேல் ஆகும். அதற்குள் எங்களது சுமார் இருபதாயிம் மூட்டை நெல் கெட்டுவிடும், மேலும் அந்த ஊர்ல நெல் மூட்டைக்கு காவல் காக்கனும், இதுபோல பல நடைமுறை சிக்கல்களும் உள்ளது. தாய் வயிற்றில் வளரும் கருவை போல இரவு பகலாக கஷ்டப்பட்டு பாதுகாத்து பிரசவ வேலை போன்ற அறுவடையின் போது நிறைமாத கர்ப்பிணியை புறக்கணிப்பபது போல எங்களை புறக்கணித்துவிட்டனர்.  வேளாண்மை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியரை காணமுடியவில்லை.

 

 Intermediaries in Paddy Purchasing ...


இவரைத் தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த விவசாயி சுரேஷ் "எங்க பகுதி விவசாயிங்க அறுவடை தொடர்பா கலெக்டரை பாக்குறதுக்கு போன அதவேளை எங்க பகுதிக்கு வந்த சில புரோக்கருங்க "எல்லாரும் கரோனா வேலையில இருக்காங்க, நெல்லு அறுவடைக்கு வந்துடுச்சு அரசாங்கத்தை நம்பினா வீணாகதான் போகும், பேசாம நாங்க கேட்கிற விலைக்கு குடுங்கனு மிரட்டல் தோனில பேசிட்டு போறாங்க. நாங்கெல்லாம் பணகஷ்டத்துல இருக்கிறத தெரிஞ்கிட்டு, அதுக்கு பின்னாடி தொடர்ச்சியா வந்த புரோக்கர்கள் நெல் மூட்டைகளை பாதி விலைக்கு கேட்டு டார்ச்சர் செய்யுறாங்க. வேளாண்மை அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ எந்த நடவடிக்கையயும் எடுக்கவில்லை'' என புலம்பினார். இவரைத் தொடர்ந்து விவசாயி சீனிவாசன் "பொதுவா 80 கிலோ எடை உள்ள நெல் மூட்டை ரூ1400 முதல் 1500, 1600 ரூபாய்க்கு விலை போகும், நெல் மூட்டைய, 900 ரூபாய்க்கு விலைக்கு கேக்குறாங்க'' என்று புலம்பினார், அதே ஊரை சேர்ந்த கோபிநாத்தோ ஊர்ல நெல்லு காயப் போட நல்ல இடமில்லை, உடனடியாக ஆட்சியாளர்கள் தலையிட்டு இந்தியாவின் முதுகெலும்மை பாதூகாக்க வேண்டும் என்றார்.

மேலும் நம்மிடம் பேசிய விவசாய சங்கத்தை சேர்ந்த நேரு "விவசாயிகள் பிரச்சனைகள் ஒன்றா, ரெண்டா, விவசாயிகள் உரிமைக்காக தொடர்ந்து போராடினாலும் பலன் இல்லை, முற்றிலும் விவசாயத்தை ஒதுக்கிவிட்டால் நாம் உணவுக்காக அண்டைநாட்டிடம் தான் கையேந்த வேண்டும் என்பதை நினைவுகொள்வோம். சமீபத்தில் பெய்த கனமழையால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து வீணாக போனது, தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யுமிடத்தில் தற்போது கொள்முதல் மையம் அமைக்க அரசு அதிகாரிகள் மௌனம் கலைய வேண்டும்.

இந்த ஒட்டுமொத்த புகார்கள் தொடர்பாக காஞ்சிபுரம் நெல் கொள்முதல் மண்டல மேலாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம் "முறையான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டிருந்தால், பர்மிஷ்சன் தருவாங்க. எல்லாம் கலெக்டர் ஆபீஸ்ல தான் கேட்கனும்'' என்று படபடப்புடன் தொடர்பை துண்டித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் பேசினோம், அவர் "கரோனா தொற்று கட்டுப்படுத்தும் வேலையில் உள்ளதால் இந்த விபரம் என் பார்வைக்கு வரவில்லை. பரவாயில்லை உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியளித்தார்.

எப்படியோ ஒவ்வொரு விவசாயிகளும் சேற்றில் இறங்கினால் தான் நமக்கெல்லாம் வீட்டில் சோறு கிடைக்கும் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்