ADVERTISEMENT

புதிய மின் இணைப்புக்குக் கட்டிடப் பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயமில்லை என்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை!

03:21 PM Oct 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


புதிய மின் இணைப்பு பெற, கட்டிடப் பணிகள் முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பிறப்பித்த ஆணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியார் நிலங்களில் உரிய அனுமதியின்றி கட்டிடப் பணிகள் மேற்கொள்வதைத் தடுக்க, அந்தக் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு, கட்டிடப் பணிகள் முடிப்பு சான்றிதழைக் கட்டாயமாக்கி, 2018-ஆம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில், புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற, கட்டிடப் பணி முடிப்பு சான்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்த, கள அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு பிறப்பித்து சில மாதங்கள் கடந்த நிலையில், அதைத் திரும்பப் பெற்று, கடந்த 6 -ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வினியோக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் அதன் செயலாளர் கதிர்மதியோன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிடப் பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற்ற ஆணையை ரத்து செய்து, புதிய இணைப்புக்கு கட்டிடப் பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவைக் கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மின் இணைப்பு பெற கட்டுமானப் பணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவை, எந்தக் காரணமும் இல்லாமல் திரும்பப் பெற்றுள்ளதாகவும், இந்த உத்தரவு சட்டவிரோத கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தும் சட்டவிதிகளின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, புதிய மின் இணைப்புகளுக்கு கட்டிடப் பணி முடிப்பு சான்று கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற்ற ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் உத்தரவிட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT